முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹசாரே போன்ற தனி மனிதர்கள் அரசை ஆட்டிப்படைப்பதை அனுமதிக்க முடியாது

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, டிச.- 22 - மத்திய அரசை அன்னா ஹசாரே போன்ற தனிமனிதர்கள் ஆட்டிப்படைப்பதை இனியும் அனுமதிக்க முடியாது என்று சோனியாகாந்தி திட்டவட்டமாக கூறியுள்ளார். அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய பின் முதன்முறையாக காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் கூட்டத்தை கட்சித் தலைவர் சோனியா காந்தி நேற்று டெல்லியில்  கூட்டினார். இந்த கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களின்  இடைத்தேர்தல் குறித்தும், லோக்பால் மசோதா மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் லோக்பால் மசோதா குறித்து எம்.பி.க்களுக்கு விளக்கம் அளித்த சோனியாகாந்தி, அமைச்சரவையில் ஒப்புதல் பெற்ற லோக்பால் மசோதாவை அன்னா ஹசாரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். இந்த விஷயத்தில் மத்திய அரசை எந்த தனி நபரும் ஆட்டிப்படைக்க முயல்வதை அனுமதிக்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். லோக்பால் மசோதா விவகாரத்தில் மத்திய அரசு எதைச் செய்தாலும் அதை ஹசாரே குறைகூறி வருகிறார். இப்போது மீண்டும் உண்ணாவிரதம், சிறை நிரப்பும் போராட்டம் என்று அறிவித்துள்ளார். இதற்கு காங்கிரஸ் இனியும் பயப்படப் போவதில்லை என்றார். லோக்பால் விஷயத்தில் எதிர்க்கட்சிகளிடம் ஏதாவது யோசனை இருந்தால் அதைச் சொல்லலாம். அதைவிடுத்து இதையே அரசியலாக்க முயன்றால் அதை அனுமதிக்க மாட்டோம். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்த பாரதிய ஜனதா அதை ஜீரணிக்க முடியாமல்தான் பாராளுமன்றத்தை முடக்கி வருகிறது. இதனால் அவர்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை. ஊழலை ஒழிப்போம் என்று சொன்னதோடு நிறுத்திக்கொள்ளாமல் அதற்காக லோக்பால் மசோதாவையும் கொண்டுவந்தது காங்கிரஸ் கட்சிதான் என்றார். காங்கிரஸ் கட்சி தேர்தல் உறுதிமொழிகளில் சொன்னபடி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மிகச்சிறப்பாக அமுல்படுத்தி வருகிறது. இதனால்தான் கடந்த தேர்தலில் நமது கட்சி வெற்றிபெற்றது. அதேபோல் உணவுக்கு உத்தரவாதம் தருவோம் என்ற உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் சட்டம் கொண்டுவரப்படும். இதன் மூலம் ஏழைகளின் பசியை போக்கிக் காட்டுவோம். பெண்களுக்கான இட ஒதுக்கீடு விஷயத்திலும் நாம் தேர்தல் காலத்தில் சொன்ன உறுதிமொழியை நிறைவேற்றுவோம்.  இதையெல்லாம் விட்டுவிட்டு லோக்பால் மோதலிலேயே காலத்தை செலவிட்டுக் கொண்டிருக்க முடியாது. இதற்காக எந்த மோதலுக்கும் காங்கிரஸ் கட்சி தயார் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்