முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 2026 தேர்தல் நமது சுயமரியாதைக்கு விடப்பட்டிருக்கும் சவால்: தமிழ்நாட்டை நாம் ஆள வேண்டுமா? அல்லது டெல்லயில் உள்ளவர்களா..? திண்டுக்கல் அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி

புதன்கிழமை, 7 ஜனவரி 2026      தமிழகம்
CM-1-2026-01-07

சென்னை, 2026 தேர்தல் என்பது, "தமிழ்நாட்டை நாங்கள் ஆளவேண்டுமா? இல்லை, எங்கேயோ டெல்லியில் இருந்து, நமக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் ஆள வேண்டுமா? என்று முடிவு செய்வதற்கான தேர்தல் இது. தமிழர்களின் சுயமரியாதைக்கு விடப்பட்டிருக்கக்கூடிய சவால் என்று திண்டுக்கல்லில் நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக பேசியுள்ளார்.

வளர்ச்சியை நோக்கி.... 

முதல்வர்  மு.க.ஸ்டாலின் திண்டுக்கல் மாவட்டம், வேலுநாச்சியார் வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:- ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடிவிட்டு, தமிழர் திருநாளாம் பொங்கல் நாளை வரவேற்க காத்திருக்கும் உங்களுக்கு இனிப்பான சர்க்கரைப் பொங்கலை போல அறிவிப்பை வழங்கிவிட்டுதான், இங்கு வந்திருக்கிறேன். எங்களைப் பொறுத்தவரையில், இது ‘ஐ.பி.’ மாவட்டம். திண்டுக்கல் பூட்டு எவ்வளவு உறுதியானதோ, அதே அளவிற்கு உறுதியுடன் இந்த மாவட்டத்தை கட்டிக் காத்து, வளர்ச்சியை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார் நம்முடைய அமைச்சர் ஐ.பெரியசாமி.

10 ஆண்டு காலம்... 

அதேபோல, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதனால்தான் தொடர் வெற்றிக்கு சொந்தக்காரராக இருக்கிறார். அவரின் துறையில், நம்முடைய திராவிட மாடல் அரசு செய்திருக்கக்கூடிய ஒரே ஒரு சாதனையைப் பற்றி நான் சொல்ல விரும்புகிறேன். அ.தி.மு.க. ஆட்சியில், 10 ஆண்டு காலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் அளவு 1 கோடியே 79 லட்சத்து 81 ஆயிரத்து 152 மெட்ரிக் டன். ஆனால், நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் வெறும் நான்கரை ஆண்டுகளில், 1 கோடியே 99 லட்சத்து 75 ஆயிரத்து 710 மெட்ரிக் டன் கொள்முதல் நாங்கள் செய்திருக்கிறோம். நன்றாக கவனியுங்கள் - அ.தி.மு.க.வின் பத்தாண்டுகளை விட நம்முடைய ஐந்தே வருடத்தில், 19 லட்சத்து 94 ஆயிரத்து 558 மெட்ரிக் டன் அதிகமாக நாம் கொள்முதல் செய்திருக்கிறோம். இது சாதாரணமானது அல்ல; மிகப் பெரிய சாதனை. இந்த சாதனைக்கு சொந்தக்காரர்தான் நம்முடைய சக்கரபாணி அவர்கள்.

பல்வேறு முடிவுற்ற....

இன்றைய விழாவை பொறுத்தவரைக்கும், 337 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பிலான 111 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 174 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 212 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 2 லட்சத்து 62 ஆயிரத்து 864 பயனாளிகளுக்கு, ஆயிரத்து 82 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு நான் இங்கே வந்திருக்கிறேன். மொத்தம், ஆயிரத்து 595 கோடி ரூபாய் மதிப்பிலான மாபெரும் விழாவாக இது அமைந்திருக்கிறது.

சமூக பாதுகாப்பு....

நீங்கள் எல்லோரும் செய்திகளில் பாத்திருப்பீர்கள். அரசு ஊழியர்களின் 22 ஆண்டுகால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை, தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் என்கிற பெயரில் செயல்படுத்த நான் ஆணையிட்டிருக்கிறேன். அரசு ஓய்வூதியம் என்பது அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வுக்குப் பிறகும், அவர்களின் வாழ்நாள் முழுவதும் மட்டுமல்ல; அவர்கள் வாழ்க்கைத் துணையின் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டிய சமூக பாதுகாப்பு. அதையும் நாங்கள் மறுபடியும் நாம் உறுதி செய்திருக்கிறோம். 

ஆறரை லட்சம் பேர்.... 

இதன் மூலமாக, நிச்சயமற்ற எதிர்காலம் என்ற நிலையிலிருந்து நம்பிக்கை அளிக்கும் எதிர்காலத்தை நாம் உருவாக்கியிருக்கிறோம். இப்போது அரசு ஊழியர்கள் கொடுக்கின்ற பேட்டிகளை எல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள். என்ன சொல்கிறார்கள், “எங்கள் ஓய்வுகால வாழ்க்கையை முதல்வர் அர்த்தமுள்ளதாக மாற்றியிருக்கிறார். இந்த அறிவிப்பு மூலம் ஆறரை லட்சம் பேர் வாழ்க்கையில் முதல்வர்  ஒளியேற்றி வைத்திருக்கிறார் என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறார்கள்.

3 ஆயிரம் ரூபாய்....

மற்றொரு பக்கம், நாட்டில் சாமானிய மக்கள் ஒருவர்கூட நிம்மதியாக இருக்கக் கூடாது என்று நினைக்கும் ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்கள் என்ன சொல்கிறார்கள் - இந்த திட்டத்தையெல்லாம் “செய்யவே முடியாது” என்று சொல்லிகொண்டு இருந்தார்கள். ஆனால், நாம் செய்து காட்டியிருக்கிறோம். அதேபோல், அடுத்த முக்கிய அறிவிப்பு, தமிழ்நாட்டில் இருக்கும் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி அட்டைதாரர்களுக்கு தமிழர் திருநாளான பொங்கலைக் கொண்டாட 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறோம். அந்த ரொக்கம் மட்டுமல்ல, பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுநீள கரும்பு வழங்கவும் ஆணையிட்டிருக்கிறேன்.

வேட்டி, சேலை... 

அதுமட்டுமல்ல, பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள வேட்டி, சேலைகள் அனைத்து மாவட்டங்களுக்கும் இதுவரையில் எந்த வருடமும் இல்லாத வகையில் முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. நாளை நான் சென்னையில் பொங்கல் தொகுப்பு வழங்குவதை தொடங்கி வைக்கயிருக்கிறேன். அதையொட்டி அனைத்து மாவட்டங்களிலும், 3 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், பரிசுத்தொகுப்பு, வேட்டி, சேலை என்று எல்லாம் சேர்த்து மொத்தமாக 7 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப் போகிறோம். வருகின்ற பொங்கல், உங்கள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உங்களுக்காக தரக்கூடிய மகிழ்ச்சி பொங்கல்.

மாணவர்களுக்கு....

இதுமட்டுமா. இரண்டு நாட்களுக்கு முன்பு, 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் “உலகம் உங்கள் கையில்” என்கின்ற திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறேன். அதன் முதற்கட்டமாக 10 லட்சம் மாணவர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் வழங்கியிருக்கிறோம். இதனால் அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டக் கல்லூரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. போன்ற அனைத்து படிப்புகள் சார்ந்த மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கப்படுகிறது.உலகத் தரமான கம்பெனிகளின் லேப்டாப்-ஐ தான் நம்முடைய மாணவர்களின் கைகளில் நாம் வழங்கியிருக்கிறோம். “நீங்கள் நன்றாக படியுங்கள் - மற்ற எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன். உலகம் உங்கள் கையில்” என்று நான்அந்த நிகழ்ச்சியில் சொல்லி இருக்கிறேன்.

997 திருக்கோவில்கள்....

நம்முடைய அரசு பொறுப்பேற்றதிலிருந்து இப்போது வரை சுமார் 4 ஆயிரம் திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு அதாவது, அவருக்கு புரியும் மொழியில் சொல்ல வேண்டும் என்றால், கும்பாபிஷேகம் நடத்தியிருக்கிறோம் இப்படியொரு சாதனையை நீங்கள் ஆளுகின்ற பா.ஜ.க. மாநிலங்களில் செய்திருக்கிறீர்களா? கண்டிப்பாக இருக்காது. அதுமட்டுமல்ல, 997 திருக்கோவில்களுக்கு சொந்தமான 7 ஆயிரத்து 701 கோடி ரூபாய் மதிப்பிலான 7 ஆயிரத்து 655 ஏக்கர் நிலங்களை மீட்டிருக்கிறோம். உண்மையான பக்தர்கள் நம்முடைய அரசைப் பாராட்டுகிறார்கள்.

பக்தர்கள் விரும்பும்.... 

தலைமைச் செயலகத்தில் வாரத்தில் எப்படியாவது இரண்டு நாட்கள் இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த பணிகளை நான் தொடங்கி வைத்து அந்த விழாவில் பங்கேற்றேன். நம்முடைய ஆட்சியில், இந்து சமயம் சார்ந்து என்னென்ன செய்திருக்கிறோம் என்று ஒரு நாள் முழுவதும் பேசுகின்ற அளவிற்கு சாதனைகள் பெரிய பட்டியலே இருக்கிறது. அதனால் தான் பக்தர்கள் விரும்பும் ஆட்சியாகதான் திராவிட மாடல் ஆட்சி இருக்கிறது, ஆன்மீகப் பெரியவர்கள் விரும்பும் ஆட்சியாக இருக்கிறது. அனைத்து சமயத்தவர்களின் நம்பிக்கைக்கும் மதிப்பளித்து, அவர்களின் மத உரிமைகளை காப்பாற்றும் ஆட்சியை நடத்திக் கொண்டு வருகிறோம்.

நடக்கவே நடக்காது...

இப்படிப்பட்ட நம்முடைய தமிழ்நாட்டில் இந்துக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக துளியும் உண்மையில்லாத குற்றச்சாட்டை உள்துறை அமைச்சர் சொல்வது அவருடைய பதவிக்கு கண்ணியமல்ல. உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், கலவரம் செய்யவும், பிளவு ஏற்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்களின் எண்ணம்தான் தமிழ்நாட்டில் ஈடேறவில்லை. அது இனியும் நடக்காது. நடக்கவும் விடமாட்டோம். இந்த ஸ்டாலின் இருக்கின்றவரை அது நடக்கவே நடக்காது. வெளிப்படையாக சொல்லவேண்டும் என்றால், ஒரு சிலர், இங்கு இப்படி பேசி, வடமாநிலங்களில் வெறுப்பு பிரசாரம் செய்யலாமா என்பதுதான் அவர்களின் எண்ணம்.

அவரே கேட்டுவிட்டார்... 

தமிழ்நாடு வந்த உள்துறை அமைச்சர் அவதூறு மட்டும் பரப்பிவிட்டு செல்லவில்லை. ஒரு நல்ல காரியத்தையும் செய்துவிட்டு சென்றிருக்கிறார். நாம் கேட்க வேண்டிய கேள்வியை அவரே கேட்டுவிட்டார். நம்முடைய வேலையை அவர் இன்னும் ஈசியாக்கிவிட்டார். அதற்காக நான் அவருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். “தமிழ்நாட்டில் மோடி ஆட்சி அமைய வேண்டுமா... வேண்டாமா?” என்று மக்களைப் பார்த்து அமித் ஷா அவர்கள் கேட்டிருக்கிறார். 

முடிவு செய்யும் தேர்தல்....

ஐயா, இதையேதான் நாங்களும் சொல்கிறோம். 2026 தேர்தல் என்பது, "தமிழ்நாட்டை நாங்கள் ஆளவேண்டுமா? இல்லை, எங்கேயோ டெல்லியில் இருந்து, நமக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் ஆள வேண்டுமா? என்று முடிவு செய்வதற்கான தேர்தல் இது. தமிழர்களின் சுயமரியாதைக்கு விடப்பட்டிருக்கக்கூடிய சவால் “அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்தால், பா.ஜ.க.தான் தமிழ்நாட்டை ஆளும்” என்று நாங்கள் சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை, அமித்ஷா அவர்கள் நேரடியாகவே ஒப்புதல் வாக்குமூலமாக தந்திருக்கிறார்.

நம்முடைய பக்கம் தான்....

 

மக்கள் எப்போதும் நம்முடைய அரசு பக்கம் தான் இருக்கிறார்கள். மறுபடியும் நாங்கள்தான் வருவோம். நல்லாட்சியைத் தொடர்வோம். எதிலும் நம்பர் ஒன், அனைத்துத் துறையிலும் ஏற்றம் என்று இதுவரை காணாத வளர்ச்சியை நோக்கி தமிழ்நாட்டை கொண்டு செல்வோம். திராவிட மாடல் 2.0-வில் இன்னும் பெரிய சாதனைகளைப் படைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து