முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விலையில்லா அரிசி திட்டம் தொடரும்: அமைச்சர்

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.23 - குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும், ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் விலையில்லா அரிசி (20 கிலோ வழங்கும்) திட்டம் நிறுத்தப்படவில்லை என்றும், இத்திட்டம் தொடர்ந்து செயல்படும் என்றும், விஷமிகள் பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்நறும், தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் முதல்வர் ஜெயலலிதாவின் நல்லாட்சியில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் மூலம் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 1,85,93,319 குடும்ப அட்டைதாரர்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மாதம் ஒன்றுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தகுதியின் அடிப்படையில் 20 கிலோ அரிசியும், அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு குடும்ப அட்டை ஒன்றுக்கு 35 கிலோ வீதமும் விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தினை தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 01.06.2011 முதல் அமல்படுத்தி தரமான அரிசி வழங்கி வருகிறார்கள்.  இதனால் கடந்த ஏழு மாதங்களில் 25 இலட்சம் மெட்ரிக் டன் அரிசியை குடும்ப அட்டைதாரர்கள் விலை ஏதுமில்லாமல் பெற்று பயனடைந்துள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதாவின் நல்லாட்சியின் மீது பொறாமையும், காழ்ப்புணர்ச்சியும் கொண்டு ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கிலும், மக்களின் கவனத்தை ஆட்சிக்கு எதிராக திசைதிருப்பும் வகையிலும் தற்போது வழங்கப்பட்டுவரும் விலையில்லா அரிசிக்கு அரசு விலை நிர்ணயம் செய்யப் போவதாகவும், விலை நிர்ணயம் செய்யப்பட்டுவிட்டதாகவும், உண்மைக்கு மாறான, பொய்யான விஷமப் பிரச்சாரங்களை ஒரு சிலர் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

இது உண்மையல்ல. இத்திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்தும் நோக்கத்துடன் முதல்வர் ஜெயலலிதா 2011-12 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இத்திட்டத்திற்கு ரூ.4500 கோடி மானியமாக ஒதுக்கியுள்ளார்கள்.   மேலும், தற்போது ரூ.400 கோடி கூடுதல் மானியம் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

இதுமட்டுமல்லாமல், ஒரு சிலருக்கு மட்டுமே பயனளிக்கும் வகையில் தற்பொழுது மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள உணவுப் பாதுகாப்புச் சட்டத்திலிருந்து தமிழக அரசிற்கு விலக்களிக்க வேண்டுமென தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பாரத பிரதமரை கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.

எனவே, பொது மக்கள் யாரும் விலையில்லா அரிசி தொடர்பான பொய்ப்பிரச்சாரங்கள் எதையும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.

பொய்ப்பிரச்சாரங்கள் மற்றும் வதந்திகளை பொய்யாக்குவதுடன், உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்ற பொன்மொழியை உறுதிப்படுத்தும் வகையில், தமிழக மக்களின் நலனில் என்றும் அக்கறை கொண்ட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் விலையில்லாத அரிசி வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிவரும் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி வழங்கும் திட்டம் முதல்வர் ஜெயலலிதா அரசால் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். 

இவ்வாறு தமிழக அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்