முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெடிகுண்டு மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்: சரத்குமார்

வியாழக்கிழமை, 26 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

தென்காசி. ஜன.26 - வெடிகுண்டு மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன் தொடர்ந்து மக்கள் பணியாற்றுவேன் என தென்காசி எம்.எல்.ஏ. சரத்குமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். தென்காசி சட்டமன்ற உறுப்பினரும், சமத்துவ மக்கள் கட்சியின் மாநில தலைவருமான ஆர்.சரத்குமாருக்கு கடந்த சிலநாட்களுக்கு முன் ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. இதுபற்றி தென்காசி போலீஸார் வழக்குப்பதிவு செய்து மிரட்டல் கடிதம் அனுப்பிய ஆசாமியை வலை வீசி தேடிவருகிறார்கள்.

இந்நிலையில் சரத்குமார் எம்.எல்.ஏ. நேற்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-  கடந்த 7 மாதங்களுக்கு முன் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நான் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். நான் வெற்றி பெற்ற பிறகு பலமுறை தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களின் கோரிக்கைகளை நேரில் கேட்டறிந்து அதனை நிறைவேற்றி வருகிறேன். மேலும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன்மூலம் மக்கள் தங்களின் குறைகளை தெரிவித்து வருகிறார்கள். இதுவரை மக்களிடம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறேன். இந்நிலையில் யாரோ ஒரு மர்ம ஆசாமி நான் தொகுதிக்கு செல்லவில்லை என்றும், தொகுதி பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறியதோடு என்னை மிரட்டுகிற வகையில் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார். எனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அனுப்ப பட்டுள்ள மிரட்டல் கடிதத்திற்கு என்னுடைய செயல்பாடுகளே பதில் சொல்லிவிடும். இருப்பினும் மிரட்டல் கடிதம் வந்ததாக பத்திரிகைகளில் செய்தி வெளியானதால் பத்திரிகை மூலம் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியத்தின் அடிப்படையில் எனது விளக்கத்தை தெரிவிக்க விரும்புகிறேன். 

தென்காசி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் விடுமுறை நாட்களை தவிர எல்லா நாட்களும் முழுமையாக செயல்பட்டு வருகிறது. இதுவரை பொது மக்கள் மூலமாக சுமார் 6 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டு பரிந்துரை கடிதத்துடன் துறைவாரியாக அனுப்பப்பட்டு வருகிறது. நான் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் படிப்படியாக நிறைவேற்றி வருகிறேன். குறிப்பிட்டு சொல்வது என்றால் விரைவில் முடிவடையும் நிலையில் உள்ள தென்காசி மேம்பால சர்வீஸ் ரோடு, ஆசாத்நகர் பகுதியில் கட்டப்பட்டு வரும் சிற்றாற்று பாலம், சுரண்டையில் எனது சொந்த செலவில் தேவர்சிலை அமைக்க ரூபாய் 2 லட்சம் வழங்கியுள்ளேன். சுரண்டை அரசு கலைக்கல்லூரி புதிய கட்டிடத்தில் இயங்க நடவடிக்கை, தென்காசி கல்லூரி மாணவர்களை கொண்டு அரசு மருத்துவமனை சுத்தம் செய்தல், மேலும் அரசு நலத்திட்டங்கள் அனைத்தும் தென்காசி தொகுதி மக்களுக்கு கிடைக்க பெரும் முயற்சி மேற்கொண்டு செயல்பட்டு வருகிறேன். மேலும் எனது சொந்த செலவிலும் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறேன். விளம்பரம் மூலமோ, அல்லது ஆடம்பரமான விழாக்கள் நடத்தாததால் இந்த பணிகள் எல்லாம் வெளிச்சத்திற்கு வரவில்லையோ என நான் சில சமயங்களில் நினைத்தது உண்டு. கடந்த 3 மாத காலமாக உலகத்தரம் வாய்ந்த ஆய்வு நிறுவனத்தின் மூலம் தென்காசி தொகுதியில் ஒரு சிறப்பு ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். அதன்படி தென்காசி தொகுதியில் குடிநீர்வசதி, சாலை வசதி, சுகாதார வசதி, கல்விமேம்பாடு, விவசாய வளர்ச்சி, என அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கான வழிமுறைகளை ஆராய்ந்து அவற்றை முறைப்படி செயல்படுத்தி 5 ஆண்டுகளில் தமிழகத்திலேயே முன்மாதிரி தொகுதியாக தென்காசி தொகுதியை மாற்றிக்காட்டும் பணியில் நான் முழு மூச்சுடன் பணியாற்றி வருகிறேன். இந்த வெடிகுண்டு மிரட்டல் ஜாலங்கள் எல்லாம் என்னிடம் பலிக்காது எத்தகைய துர்சக்தியையும் மக்கள் பலத்தோடு சந்திக்க தயாராக இருக்கிறேன் இவ்வாறு சரத்குமார்  அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்