முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய வரியில் 50 சதவீதம் தமிழகத்திற்கு தர வேண்டும்: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சனிக்கிழமை, 24 மே 2025      இந்தியா
CM-1-2025-05-24

புதுடெல்லி, 2024-2025-ம் ஆண்டிற்கான ரூ.2,200 கோடி கல்வி நிதியை தமிழ்நாட்டிற்கு உடனே விடுவிக்க வேண்டும் என்றும் மத்திய வரியில் 50 சதவீதம் தமிழ்நாட்டிற்கு தர வேண்டும் உள்ளிட்ட கோரிகைகளை பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற

நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். மேலும் காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட முக்கியமான ஆறுகளை சுத்தம் செய்து மீட்டெடுக்க புதிய திட்டத்தை மத்திய அரசு உருவாக்கித் தர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடப்பு நிதி ஆண்டுக்கான 10-வது நிதி ஆயோக் கவுன்சில் கூட்டம் நேற்று காலை 11 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்க வரும்படி அழைப்பு விடப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்ட இந்த நிதி ஆயோக் 2015-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இந்த குழுவின் தலைவராக பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார்.

இந்நிலைியல் புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நேற்று காலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- பிரதமர் - மத்திய அமைச்சர்கள், அனைத்து மாநில முதல்வர்கள், நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் உள்ளிட்ட அனைவருக்கும் வணக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு எல்லையில் நிலவிய பதற்றமான சூழ்நிலையில், நமது ராணுவ வீரர்களுக்கு ஆதரவாகப் பேரணி நடத்தி, நாட்டின் ஒற்றுமையை வெளிப்படுத்திய தமிழ்நாட்டின் சார்பாக இந்த நிதி ஆயோக்கின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.

பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகள் பங்கேற்றுள்ள இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து சுருக்கமாகச் சொல்ல விரும்புகிறேன். சமத்துவம் மற்றும் சமூகநீதி அடிப்படையில், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நீடித்த பொருளாதார வளர்ச்சிதான் எங்களுடைய தொலைநோக்குப் பார்வை. எல்லோர்க்கும் எல்லாம் என்ற அந்தக் குறிக்கோளுக்குப் பெயர்தான் திராவிட மாடல்.

எங்களது அரசில் - 2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து, செயலாற்றி வருகிறோம். அதன் பயன்கள்தான் புள்ளிவிவரங்களாக - வளர்ச்சிக் குறியீடுகளாக எதிரொலிக்கின்றன. குறிப்பாக, அண்மைக்காலங்களில் ஆண்டுதோறும் 8 விழுக்காட்டிற்கும் மேலான வளர்ச்சி. கடந்தாண்டு நாட்டிலேயே அதிகமாக 9.69 விழுக்காடு வளர்ச்சி என்ற பாய்ச்சலில், இந்திய விடுதலையின் நூற்றாண்டில் (2047-ல்), 4.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்ற சவாலை எங்கள் முன் வைத்துக்கொண்டு உழைத்து வருகிறோம். இந்தியாவின் இலக்கான 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தில், எங்களது பங்களிப்பு வலுவாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்.

தமிழ்நாடு முழுவதும் தொழில்மயமாகி உள்ளது. ஆட்டோமொபைல் முதல் பசுமை ஹைட்ரஜன் வரை, அனைத்து வளர்ந்து வரும் துறைகளிலும் வலுவான வளர்ச்சியைக் கண்டுள்ளோம். இந்தியாவில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 41 விழுக்காட்டு பெண் பணியாளர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். 18 லட்சம் குழந்தைகளுக்குப் பயனளிக்கும் காலை உணவுத் திட்டம், ஒரு கோடியே 14 லட்சம் பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் 'கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்,  பெண்கள் இதுவரை 694 கோடி இலவசப் பயணங்களை மேற்கொண்டுள்ள விடியல் பயணம் திட்டம்,  பணிபுரியும் மகளிர் தங்குவதற்கு தோழி விடுதிகள்,  40 லட்சம் இளைஞர்களுக்கும் மேலாக திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கியுள்ள 'நான் முதல்வன்',  உயர்கல்வியை ஊக்குவிக்கும் 'புதுமைப்பெண்' – 'தமிழ்ப்புதல்வன்',  கடந்த நான்காண்டுகளில் 30 புதிய தொழிற்பூங்காக்கள்,  தகவல் புரட்சிக்கு அடித்தளமாக 16 புதிய சிறிய டைடல் பூங்காக்கள். இப்படி, எங்களுடைய திட்டங்களைப் பட்டியலிட்டு சொல்லிக்கொண்டே இருக்கலாம். இத்தகைய திட்டங்களால்தான், நகரமயமாக்கலில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குகிறது.

அதிகரித்து வரும் இந்த நகர்ப்புற மக்களுக்கு அடிப்படை வசதிகள், நல்ல உட்கட்டமைப்பு மற்றும் வாழ்க்கைத் தரத்தை வழங்குவது நம்முடைய கடமை. நாட்டிலுள்ள நகர்ப்புறங்களின் மேம்பாட்டிற்கு பெருமளவிலான நிதியைக் கொண்ட ஒரு பெரிய திட்டம் அவசியம். 'அம்ருத் 2.O' திட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், சிறந்த உட்கட்டமைப்பு, இயக்கம் மற்றும் சுகாதாரத்தை மையமாகக் கொண்ட ஒரு புதிய நகர்ப்புற மறுமலர்ச்சித் திட்டத்தை உருவாக்குவது அவசரத் தேவையாகும். இதுபோன்ற ஒரு திட்டத்தை விரைவில் நீங்கள் உருவாக்கிட வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

"சுத்தமான கங்கை" திட்டம் கங்கை நதியை மேம்படுத்துவதிலும், மீட்டெடுப்பதிலும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது. ஆறுகள் நமது நாட்டின் உயிர்நாடியாக இருப்பதால், தமிழ்நாட்டில் உள்ள காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட முக்கியமான ஆறுகளையும், நாட்டிலுள்ள பிற முக்கியமான ஆறுகளையும் சுத்தம் செய்து மீட்டெடுக்க இதேபோன்ற திட்டம் தேவை. எனவே, காவிரி, வைகை, தாமிரபரணிக்கு புதிய திட்டத்தை நீங்கள் உருவாக்கித் தர வேண்டும்.

இந்தத் திட்டங்களுக்கு எல்லாம், அனைத்து மாநிலங்களுக்கும் தொடர்பு மொழியாக இருக்கும் ஆங்கிலத்தில் பெயரிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அவற்றை மாநிலங்கள் தங்களது மொழியில் மொழிபெயர்த்துக் கொள்வார்கள். 2047-ம் ஆண்டுக்குள் 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவதற்கும், இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கும் பிரதமர் அவர்களின் தொலைநோக்குப் பார்வை பாராட்டத்தக்கது. கடந்த நிர்வாகக் குழுக் கூட்டத்தில், பிரதமர், ''மாநிலங்கள் மக்களுடன் நேரடியாக இணைந்திருப்பதால், இந்தத் தொலைநோக்குப் பார்வையை அடைவதில் மாநிலங்கள் தீவிர பங்கு வகிக்கின்றன'' என்று பேசியிருந்தார். அவரது தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கு, கூட்டுறவு கூட்டாட்சி என்பது அவசியமான அடித்தளமாகும்.

எனவே, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் தங்கள் வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு, மத்திய அரசு பாகுபாடின்றி ஒத்துழைப்பு தர வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். 'பி.எம். ஸ்ரீ' திட்டம் தொடர்பான கல்வி அமைச்சகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சில மாநிலங்கள் கையெழுத்து போடாததால், எஸ்.எஸ்.ஏ. நிதி மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2024-2025-ம் ஆண்டில் கிட்டத்தட்ட 2,200 கோடி ரூபாய் மத்திய நிதி தமிழ்நாட்டுக்கு மறுக்கப்பட்டுள்ளது. இது அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் மற்றும் ஆர்.டி.இ. கீழ் (கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ்) படிக்கும் குழந்தைகளின் கல்வியைப் பாதிக்கிறது. எனவே, தாமதமின்றி, ஒருதலைப்பட்ச நிபந்தனைகளை வலியுறுத்தாமல் இந்த நிதியை விடுவிக்குமாறு நான் உங்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

மாநிலத்துக்கு கிடைக்க வேண்டிய, தரப்பட வேண்டிய நிதியானது எப்போதும் போராடி – வாதாடி - வழக்குப் போட்டு பெற வேண்டிய நிலைமையில் இருப்பது கூட்டாட்சி இந்தியாவுக்கு அழகல்ல. இது மாநிலத்தின் வளர்ச்சியையும் பாதிக்கும்; இந்தியாவின் வளர்ச்சியையும் பாதிக்கும். 'கடந்த 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்ககூடிய வரி வருவாய்ப் பங்கினை 41 விழுக்காடாக உயர்த்தினார்கள். ஆனால் இந்தப் பரிந்துரைக்கு மாறாக கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் 33.16 விழுக்காடு மட்டுமே மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது.

மத்திய அரசும் - மாநில அரசுகளும் இணைந்து செயல்படுத்திடும் திட்டங்களுக்கான மாநில அரசின் பங்குத்தொகை, தொடர்ந்து உயர்ந்து வருவதும், தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் நிதி நிலையை மேலும் பாதிக்கின்றது. ஒருபுறம் - மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய வரிப் பகிர்வு குறைவதால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள். மறுபுறம் - மத்திய அரசு அறிமுகப்படுத்தும் திட்டங்களுக்கு மாநில அரசு செலவிடும் அதிக நிதி என இரண்டுமே மாநில அரசுகளுக்குப் பெரும் சுமையை ஏற்படுத்துகின்றன. எனவே, மத்திய வருவாயில் மாநிலங்களுக்கான வரிப் பகிர்வின் பங்கு 50 விழுக்காடு உயர்த்தப்படுவதுதான் முறையானதாக இருக்கும். இதனை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

நிறைவாக, சிறப்பான இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்து, எங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள ஒரு நல்ல வாய்பினை அளித்ததற்காக, நிதி ஆயோக் அமைப்பிற்கு என் நன்றி. அனைத்து மக்களும் வளமுடன் வாழ்ந்திடும் வகையில், அனைத்து பண்பாடுகளும் செழித்திடும் வகையில், பன்முகத்தன்மை கொண்ட - வலிமையான நாடாக இந்தியா திகழ்ந்திட, தமிழ்நாடு தனது சிறந்த பங்களிப்பை என்றும் வழங்கிடும். தற்சார்புடனும், தனித்துவமான அடையாளங்களுடனும் ஒவ்வொரு மாநிலமும் செழித்து வளரும்போதுதான் ஒன்றுபட்ட வலிமையான இந்தியத் திருநாடு உலக அரங்கில் உயர்ந்து நிற்கும். அதற்கு தமிழ்நாடு எப்போதும் துணை நிற்கும் என்று உறுதியளிக்கிறேன். வாழ்க தமிழ். வெல்க தமிழ்நாடு. வளர்க இந்தியா. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து