முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நோயாளிகளை இனி மருத்துவ பயனாளிகள் என அழைக்கலாம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சனிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2025      தமிழகம்
CM-2 2025-08-02

Source: provided

சென்னை : மருத்துவர்களையும், மருத்துவமனையையும் நாடுபவர்களை நோயாளிகள் என்றழைக்காமல், மருத்துவப் பயனாளிகள் என்றழைக்கலாம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

‘நலம் காக்​கும் ஸ்டாலின்’ திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (சனிக்கிழமை) காலை தொடங்கிவைத்துப் பேசியது: “சில நாட்களுக்கு முன்னர் எனக்கு தலைசுற்றல் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கே சில பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்று அனுமதிக்கப்பட்டேன். அங்கு இருந்தபோதும் கூட முக்கியமான அரசு அலுவல்களை மேற்கொண்டேன்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் பற்றி அதிகாரிகள், ஆட்சியர்கள், மக்களிடம் ஆலோசனை செய்தேன். தூத்துக்குடி வந்த பிரதமரிடம் தமிழக அரசின் கோரிக்கை மனுவை அளிக்க ஒப்புதல் வழங்கினேன். உடல்நலன் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதே எனது இலக்கு. மருத்துவமனையிலிருந்து திரும்பிய பின்னர் நான் கலந்து கொண்டு பேசிய முதல் நிகழ்ச்சி இதுவே.

நான் ஆட்சிக்கு வந்தபோது, கரோனா 2-வது அலையின் தாக்கத்தால் தமிழக அரசு மிகுந்த நெருக்கடியில் இருந்தது. நான் உள்பட அனைத்து அமைச்சர்களும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்களாக மாறி செயல்பட்டோம். அதேபோல், இன்று (நேற்று) இந்தத் திட்டத்தை தொடங்குவதன் மூலம் மீண்டும் அமைச்சர்கள் அனைவரும் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்களாக மாறி, அந்தந்த மாவட்டங்களில் முகாம்களை தொடங்குகின்றனர்.

கல்வியும், மருத்துவமும் இந்த ஆட்சியின் இரண்டு கண்கள். இதற்காக நிறைய திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தியுள்ளது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்தத் துறையை சிறப்பாக வழிநடத்துகிறார். அதனால்தான் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தை ஐ.நா. சபையே பாராட்டியுள்ளது.

இன்று (நேற்று) தொடங்கியுள்ள இந்தத் திட்டத்தின் கீழ் தொடர்ந்து 1,256 முகாம்கள் நடக்கப்போகின்றன. சிறப்பு மருத்துவ வசதிகள் குறைவாக இருக்கக் கூடிய ஊரகப் பகுதிகள், குடிசைப் பகுதிகள், பழங்குடியின மக்கள் வசிக்கக் கூடிய பகுதிகள் முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு முகாம்களிலும் மருத்துவர்கள் உள்பட 200 மருத்துவப் பணியாளர்கள் இருப்பார்கள். முகாம் வரும் பயனாளிகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு முழுமையான சோதனை செய்யப்படும். பொது மருத்துவரின் அறிவுரைப்படி இசிஜி, காசநோய், தொழுநோய், கருப்பைவாய் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளும் செய்யப்படவிருக்கிறது.

தமிழக அரசு எண்ணற்ற நலத்திட்டங்களை மக்களுக்காக வழங்கி வருகிறது. அதில் ஒன்று தான் இந்த ‘நலம் காக்​கும் ஸ்டாலின்’ திட்டம். இந்தத் திட்டத்தின் சிறப்பு அம்சமே, முகாம்களில் மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் மக்களுக்கு தொகுத்து ஒரு கோப்பாக வழங்கப்படும். அந்த அறிக்கையை கொண்டு எதிர்காலத்தில் எந்த மருத்துவமனையிலும் அவர்கள் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

நம் அரசின் குறிக்கோள் நகர்ப்புறத்தில் வசதி வாய்ப்புடைய மக்கள் மருத்துவ சேவைகளைப் பெறுவதுபோல், கிராமப்புறத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே. அதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்தத் திட்டம். இதை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்.

மருத்துவர்களையும், மருத்துவமனையையும் நாடுபவர்களை நோயாளிகளாக என்றழைக்காமல் மருத்துவப் பயனாளிகள் என்றழைக்க வேண்டும். மருத்துவ முகாம்களுக்கு வருபவர்களை குடும்பத்தாரை கவனித்துக் கொள்வது போல் அக்கறையுடன், பரிவுடன் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல் மக்கள் பிரதிநிதிகளும், அரசு அதிகாரிகளும் இந்தத் திட்டத்தை மக்களிடம் சரியாகக் கொண்டு சேர்க்க வேண்டும். அவர்கள் பயன்பெற அத்தனை உதவிகளையும் செய்ய வேண்டும். ஏனெனில், இந்தத் திட்டம் ஒருவரின் உயிரைப் பாதுகாக்கப் போகும் திட்டம். தமிழ்நாடு எல்லாவற்றிலும் முதன்மையானதாக திகழ வேண்டும் என்பதே எனது கனவு. அவ்வாறாக மருத்துவ சேவை வழங்குவதிலும், மக்களின் உடல்நிலையை பாதுகாப்பதிலும் தமிழ்நாடு தான் முதன்மையானதாக திகழும் என்ற நம்பிக்கையோடு, நலமான வாழ்வு பெற வாழ்த்தி விடைபெறுகிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து