முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி பயங்கரவாத தாக்குதல்: டிச.6-ம் தேதி தாக்குதல் நடத்தும் சதிச்செயல் திட்டம் முறியடிப்பு

வியாழக்கிழமை, 13 நவம்பர் 2025      இந்தியா
Modi-2025-11-12

புதுடெல்லி, டெல்லி பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் பாபர் மசூதி இடிப்பு தினமான வரும் டிசம்பர் 6-ம் தேதி தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்ததாகவும் அது தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது என்றும்  விசாரணையில் தெரியவந்துள்ளது.

டெல்லி செங்கோட்டை எதிரே கடந்த 10-ம்  தேதி இரவு, வெடிபொருளை மறைத்து எடுத்துச்சென்ற கார் வெடித்துச் சிதறியது. இதில் 13 பேர் பலியானார்கள். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஜம்மு காஷ்மீர் மற்றும் அரியானா மாநிலத்தில் 3 ஆயிரம் கிலோ அமோனியம் நைட்ரேட் மற்றும் பல ஆயுதங்கள், பொருட்கள் கைப்பற்றப்பட்டதன் தொடர்ச்சியாக இந்த வெடிப்பு நிகழ்த்தப்பட்டு உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக முதலில் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பயங்கரவாதத்தோடு தொடர்புடைய சம்பவம் என்பதால் பின்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவின்பேரில் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. இந்த சுவரொட்டிகள் மீது ஜம்மு காஷ்மீர் மாநில போலீசாருக்கு ஏற்பட்ட சந்தேகம்தான் பயங்கரவாதிகளின் குற்றப்பயணத்தை பின்தொடர வழிவகுத்தது.

போலீசார் இது தொடர்பாக நடத்திய விசாரணையில் பயங்கரவாத கும்பலுடன் தொடர்புடைய மருத்துவக்குழு நாட்டில் பல இடங்களில் குறிப்பாக டெல்லியில் நாசவேலையை நடத்த திட்டமிட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து இர்பான் அகமது என்பவரையும், ஒரு டாக்டரையும் ஜம்மு காஷ்மீர் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில்தான் உத்தரபிரதேச மாநிலம் ஷாகரன்பூரில் டாக்டர் அதீல் ராதர் கைது செய்யப்பட்டார். இவர் போலீசில் அளித்த வாக்குமூலத்துக்கு பிறகுதான் அரியானா மாநிலத்தில் உள்ள அல்பலா மருத்துவ பல்கலைக்கழக டாக்டர்கள் பலருக்கு இதில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசார் தங்களது விசாரணையை அரியானாவில் தொடர்ந்தபோது பரிதாபாத்தில் டாக்டர் முசமில் ஷகீலும், பெண் டாக்டர் ஷாகீத்தும் பிடிபட்டனர். முசமில் ஷகீலின் அடுக்குமாடி அறையில் இருந்து 360 கிலோ அமோனியம் நைட்ரேட் கைப்பற்றப்பட்டது. இந்தநிலையில்தான் 10-ம்  தேதி கார் வெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டது. பயங்கரவாத டாக்டர் குழுவில் இணைந்திருந்த உமர் முகமது, தான் விலைக்கு வாங்கிய ஹூண்டாய் ஐ-20 காரில் வெடிபொருட்களை எடுத்துச்சென்று செங்கோட்டை அருகே வெடிக்கச் செய்துள்ளார். இந்த கார் அன்றைய தினம் டெல்லியில் சுற்றிய காட்சிகள் கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் எடுக்கப்பட்டு, அதில் உமர் முகமது இருந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையில் மேலும் 2 கார்களை உமர் முகமது வைத்திருந்ததாக கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து போலீசார் அதனை தேடினர். இதில் ‘போர்டு’ நிறுவனத்தின் ’ஈகோஸ்போர்ட்’ என்ற சிவப்பு நிற காரும் ஒன்று. அந்த காரின் பதிவு எண்ணை டெல்லி மற்றும் சுற்றுப்புற மாநில போலீசாருக்கு அனுப்பி தேடச் செய்தனர்.

இந்தநிலையில் அந்த காரை போலீசார் நேற்று முன்தினம் மாலை கண்டுபிடித்தனர். அரியானா மாநிலம் கண்டவாலி கிராமத்துக்கு அருகே அந்த கார் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த காரை பரிதாபாத் போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். இதுதவிர மேலும் ஒரு காரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

கார் வெடிப்பு சம்பவத்தில் உமர் முகமது தற்கொலை குண்டாக வெடித்திருப்பார் என கருதப்படுவதால் கார் மற்றும் வெடிப்பு பகுதியில் கிடந்த சதைப்பகுதிகளை எடுத்து, அதை உமர் முகமதுவின் தாயார் டி.என்.ஏ.வுடன் ஒப்பிட நடவடிக்கைககள் எடுக்கப்பட்டன. உமர் முகமது தாயாரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொடுக்கப்பட்டு உள்ளது. சம்பவத்திற்கு முன்பாக செங்கோட்டை அருகே ராம்லீலா மெய்டன் ஆசாம் அலிசாலையில் உள்ள ஒரு மசூதியில் டாக்டர் உமர் தங்கியிருந்ததாக தெரிகிறது. அதன்பிறகே அவர் செங்கோட்டை அருகே காரில் சென்றுள்ளார்.

3 கார்கள் வாங்கப்பட்டதை கவனிக்கும்போது அவற்றை டெல்லியில் ஆங்காங்கே நிறுத்தி வெடிக்க வைக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்காக அவர்கள் ஒத்திகை பார்த்திருப்பதாகவும் தெரிகிறது. வெடித்து சிதறிய கார் கடந்த தீபாவளிக்கு முன்பு செங்கோட்டை பகுதியில் சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது. டாக்டர் முசமில் ஷகீனின் செல்போனில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்களின்படி கடந்த ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் அவர் பல முறை டெல்லி செங்கோட்டை பகுதிக்கு வந்துசென்றுள்ளார். எனவே அவர் குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் குண்டுவெடிப்புக்கு திட்டமிட்டு இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

அதன் ஒரு பகுதியாகத்தான் செங்கோட்டையை சுற்றி பார்த்ததும் தெரியவந்தது. ஆனால் தீவிர ரோந்துப்பணியால் அந்த சதிச்செயல் முறியடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதேபோல் தீபாவளி பண்டிகைக்கு மக்கள் கூட்டம் அலைமோதும். அந்த சமயத்திலும் சதித்திட்டத்திற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள். ஆனால் அதை செயல்படுத்த முடியவில்லை. டிசம்பர் 6-ம்  தேதி (பாபர் மசூதி இடிப்பு தினம்) கார் வெடிப்பை நிகழ்த்தலாம் என திட்டமிட்டு இருந்ததாக தெரிகிறது.

ஆனால் அடுத்தடுத்து வெடிபொருளை கைப்பற்றி அவர்களின் சதித்திட்டத்தை போலீசார் முறியடித்து வந்த ஆத்திரத்தில் 10-ம்  தேதி உமர் முகமது காரை வெடிக்க செய்திருக்கலாம் என கருதப்படுகிறது. அவர் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடம் மற்றும் தகுந்த நேரத்தை எதிர்பார்த்து செங்கோட்டை பகுதியில் சுற்றி வந்திருப்பார் எனவும் கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து