முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை முடக்க முயற்சி மத்திய அரசு மீது அமைச்சர் குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 16 டிசம்பர் 2025      தமிழகம்
Periyasamy 2023-09-02

சென்னை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை முடக்க மத்தி அரசு முயற்சிக்கிறது என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை விக்‌ஷித் பாரத் – ரோஜ்கர் மற்றும் அஜீவிகா மிசன் என்று மத்திய பா.ஜ.க. அரசு மாற்றப் போவதாகவும் அதற்கு அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டிருப்பதாகவும், அது தொடர்பாக பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்ய சட்டத் திருத்த மசோதாவை மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வர போகிறது. இதன்படி ஒவ்வொரு நிதியாண்டிலும் 125 நாட்கள் ஊதிய வேலைவாய்ப்பு, மத்திய அரசு 60 சதவிகிதம் மாநிலங்கள் 40 சதவிகிதம் என நிதிப் பகிர்வு முறை, தினசரி ஊதியம் வாராந்திர அடிப்படையில் வழங்கல், விவசாயப் பருவத்தில் விவசாயத் தொழிலாளர்கள் கிடைப்பதை எளிதாக்கும் வகையில், ஒரு நிதியாண்டில் 60 நாட்களுக்கு வேலை வழங்கப்படாது போன்ற திருத்தங்கள் மேற்கொள்ளப் போகிறார்கள். இவை அத்தனையும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தையே முடக்கும் செயல்பாடுகள்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என்ற 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் கோடிக்கணக்கான கிராம மக்கள் பயன் அடைந்து வந்தார்கள். கிராமப்புறத்தில் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் 18 வயது நிரம்பிய ஒருவருக்கு ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 100 நாட்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது சட்டப்படி உரிமையாக்கப்பட்டது. இந்த வறுமை ஒழிப்பு திட்டத்தை மோடி அரசு அமைந்த பிறகு முடக்க ஆரம்பித்தார்கள். "காங்கிரஸ் கூட்டணி அரசின் தோல்வியின் அடையாளச் சின்னமாக தொடர விரும்புகிறேன்" என பிரதமர் மோடி கூறியபோதே திட்டத்தை சின்னாபின்னமாக்க மத்திய பா.ஜ.க. அரசு முடிவு செய்துவிட்டது என்பது அப்பட்டமாக தெரிந்துவிட்டது.

100 நாட்களுக்கு அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டுமென்றால் 2.72 லட்சம் கோடி ரூபாய் தேவை. ஆனால், அதற்குரிய நிதியை ஒதுக்காமல் மோடி அரசு கிராமப்புற ஏழைகளை வஞ்சித்தது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 100 நாட்கள் கிடைத்த வேலை, மோடி ஆட்சியில் 30 நாட்கள் கூட கிடைக்கவில்லை.

2024 பாராளுமன்றத் தேர்தல் அறிக்கையில் ’100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் வேலை நாட்கள் 100-இல் இருந்து 150-ஆகவும், ஊதியம் 400 ரூபாயாகவும் உயர்த்தப்படும்’ என தி.மு.க. வாக்குறுதி அளித்தது. இந்த வாக்குறுதிக்கு பிறகுதான் தினசரி ஊதியத்தை உயர்த்தி வழங்கும் அறிவிப்பை மோடி அரசு வெளியிட்டது. பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில், 100 நாள் வேலைத் திட்டத்திற்கான தினசரி ஊதியத்தை உயர்த்தி வழங்கும் அறிவிப்பை வெளியிட்டார்கள். 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்குத் தினசரி ஊதியம் ரூ.294 ஆக இருந்தநிலையில், ரூ. 319ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள சூழலில் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அறிவிப்பை வெளியிட்டார்கள். வாக்குப்பதிவுக்குச் சில நாட்கள் இருக்கும் போதுதான் மக்கள் மீது மோடிக்குக் கரிசனம் ஏற்பட்டது. தேர்தல் முடிந்த பிறகு இந்தத் திட்டத்தில் தனது நயவஞ்சகத்தைக் காட்டிவிட்டார் பிரதமர் மோடி. உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அதிக அளவிலான பணியாளர்கள் இந்தத் திட்டத்தில் இணைந்திருக்கின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து