புதுடெல்லி, வாரணாசி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் மோடி கடந்த பாராளுமன்ற தேர்தலில் தனது சொந்த மாநிலமான குஜராத்தில் வதோதரா தொகுதியிலும், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியிலும் போட்டியிட்டார். இரு தொகுதியிலும் வெற்றி பெற்ற அவர், பின்னர் வதோதரா தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். வாரணாசி எம்.பி.யாக நீடித்தார். இந்த தேர்தலில் அவர் மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் நபர் யார் என்று இதுவரை தெரியவில்லை. வாரணாசி தொகுதி தேர்தல் மே 19-ம் தேதி நடைபெறுகிறது. ஆனாலும், இதற்கான வேட்பாளரை மட்டும் காங்கிரஸ் இன்னும் அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காவை வாரணாசி தொகுதியில் போட்டியிட வைக்க இருப்பதாகவும், கடைசி நேரத்தில் அவரை வேட்பாளராக அறிவிப்பார்கள் என்றும் தகவல்கள் வந்துள்ளன. பிரியங்கா இதுவரை நேரடி அரசியலில் ஈடுபடாத நிலையில் அவருக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டு உத்தர பிரதேசத்தின் மேற்கு பகுதி பொறுப்பும் வழங்கப்பட்டது. அவரது வருகையால் உத்தரபிரதேசத்தில் காங்கிரசின் செல்வாக்கு அதிகரித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் வாரணாசி வேட்பாளராக மனு தாக்கல் செய்யும் இறுதி நாளன்று அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.