கட்சி வளர்ச்சி - தேர்தல் பணிகள் குறித்து மாவட்ட வாரியாக நிர்வாகிகளுடன் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். ஆலோசனை

திங்கட்கிழமை, 10 பெப்ரவரி 2020      அரசியல்
admk eps ops 2020 02 10

அ.தி.மு.க கட்சி வளர்ச்சி பணிகள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து மாவட்ட வாரியாக நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள்.  இந்த ஆலோசனைக் கூட்டம் 13-ந்தேதி வரை மாவட்ட வாரியாக  நடைபெறுகிறது. 

7 மாவட்ட நிர்வாகிகளுடன் . . .

முன்னதாக ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நேற்று காலை 10 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் துவங்கியது. நேற்று காலையில் மட்டும் கரூர், தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் ஆகிய 7 மாவட்ட நிர்வாகிகளுடன் தனித்தனியாக இந்த ஆலோசனை நடந்தது. மாவட்ட வாரியாக நிர்வாகிகளை அழைத்து கருத்து கேட்கப்பட்டது. முதல்வரும், துணை முதல்வரும் கட்சி வளர்ச்சி பணி, தேர்தல் பணி குறித்து செய்ய வேண்டியவற்றை விளக்கி அறிவுறுத்தினார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட செயலாளர், நிர்வாகிகள் உட்பட சுமார் 40 பேர் வரை கலந்து கொண்டனர்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்

நேற்று முதலாவதாக கரூர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், போக்குவரத்து அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்னாள் சபாநாயகர் மு.தம்பித்துரை உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தற்போது 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இன்னும் மீதமுள்ள 9 மாவட்டங்களுக்கும் மற்றும் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெற வேண்டி உள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டசபைக்கு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. எனவே இதற்கு தொண்டர்களை தயார்படுத்த பல்வேறு யோசனைகள் தெரிவிக்கப்பட்டது.  பிறகு நேற்று மாலை 4.30 மணிக்கு மீண்டும் ஆலோசனை நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு, திண்டுக்கல், விருதுநகர், திருச்சி மாநகர், திருச்சி புறநகர் ஆகிய 7 மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

தொடர்ந்து இன்றும் மற்றும் 12, 13 ந் தேதிகளிலும் மாவட்ட வாரியாக ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. ஆலோசனை கூட்டம் குறித்து அ. தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தலைமையில், அ.தி.மு.க. மனுக்கள் பரிசீலனைக் குழுவைச் சேர்ந்த, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, துணை ஒருங்கிணைப்பாளரும், அமைப்புச் செயலாளரும்,  தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளருமான ஆர்.வைத்திலிங்கம், எம்.பி, அமைப்புச் செயலாளர் நத்தம் இரா.விசுவநாதன், அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளரும், அமைச்சருமான பி.தங்கமணி, அமைப்புச் செயலாளரும், கோவை புறநகர் மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி ஆகியோர் முன்னிலையில் இன்று ( நேற்று ) காலை கரூர், ஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் பகுதிக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டம் வாரியாக நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கழக வளர்ச்சிப் பணிகள் குறித்தும், தேர்தல் பணிகள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இவ்வாறு அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து