ராமர் கோயில் திருப்பணிகள் மத ஒற்றுமைக்கு பங்கம் இல்லாமல் நடைபெற வேண்டும் - அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 21 பெப்ரவரி 2020      இந்தியா
PM Modi 2020 02 21

புது டெல்லி : அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் கட்டுமானப் பணிகள் மதநல்லிணக்கத்துக்கு தீங்கு விளைவிக்காமல், எந்த ஒரு கசப்புணர்வும் இல்லாமல் நடைபெற வேண்டும் என்று தங்களை பிரதமர் நரேந்திர மொடி கேட்டுக் கொண்டதாக அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் நேற்று தெரிவித்தார்.

ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர தலைவர் நிருத்ய கோபால் தாஸ் மற்றும் 3 உறுப்பினர்கள் நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பிரதமரை பூமி பூஜை மற்றும் கட்டுமானப் பணி தொடக்க விழாவுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். இதற்கான தேதி இன்னமும் குறிக்கப்படவில்லை. இந்நிலையில் அறக்கட்டளை பொதுச் செயலர் சம்பத் ராய் கூறும் போது,

கோயில் கட்டுமானத் திருப்பணிகள் அமைதியான முறையிலும் மத ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்காமலும் கசப்புணர்வு ஏற்படுத்தாமலும் நடைபெற வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தினார். மேலும் நாட்டின் அமைதிச்சூழ்நிலை கெடுமாறு எந்த ஒரு காரியத்தையும் செய்யலாகாது என்றும் மோடி அறிவுறுத்தினார் என்று தெரிவித்தார்.

இன்று (22-ம் தேதி) அயோத்தியில் உள்ள ஹனுமன் மண்டல் பெயரில் ஆலோசனைக் கூட்டமும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பின் 2-வது ஆலோசனைக் கூட்டம் மார்ச் 3 அல்லது 4-ம் தேதி அயோத்தியில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் திட்டம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.ராமர் கோயில் கட்டும் குழுவின் தலைவராக பிரதமர் மோடியின் முன்னாள் உதவியாளர் நிர்பேந்திர மிஸ்ரா பெயர் முன்மொழியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்தான் நேற்று முன்தினம் தாஸ், ராய், கே.பராசரன், ஸ்வாமி கோவிந்த் கிரி மஹராஜ் ஆகியோர் பிரதமர் மோடியைச் சந்திக்கச் சென்ற போது மோடி இவ்வாறு கூறியதாக அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து