நியூசிலாந்து எதிரான தோல்வி குறித்து இந்திய பேட்ஸ்மேன்களுக்கு விராட் கோலி அறிவுரை

புதன்கிழமை, 26 பெப்ரவரி 2020      விளையாட்டு
kohli advice 2020 02 26

வெலிங்டன் : நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கேப்டன் விராட் கோலி அறிவுரை கூறியுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிராக வெலிங்டனில் நடந்த முதலாவது டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

இது குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஒரு பேட்டிங் குழுவாக நாம் என்ன விஷயங்களை பகிர்ந்து கொள்கிறோம் என்பதில் சரியாக இருக்க வேண்டும். எச்சரிக்கை அணுகுமுறையை (தடுப்பாட்டம்) கையாள் வதினாலோ அல்லது அச்சத்துடன் விளையாடுவதினாலோ எந்த பலனும் கிடைக்காது. அது உங்களது வழக்கமான ஷாட்டுகளை ஆடுவதை கெடுத்து விடலாம். இத்தகைய சீதோஷ்ண நிலையில் ஒன்றிரண்டு ரன் வீதம் கூட எடுக்க முடியாவிட்டால், எப்படி ஆட வேண்டும் என்ற சந்தேகம் உங்களுக்கு வந்து விடும். அதன் பிறகு அடிப்பதற்கு ஏற்ற நல்ல பந்து வரும் வரை காத்திருப்பீர்கள். அது போன்ற பந்து வராத நிலையில் நெருக்கடி ஏற்பட்டு விக்கெட்டை இழந்து விடுவீர்கள். சரி, நல்ல பந்தில் தான் ஆட்டம் இழந்தோம் என்று நீங்கள் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் நான் அந்த மாதிரி சிந்திப்பவன் அல்ல. என்னை பொறுத்தவரை எந்த சூழ்நிலையில் இறங்குகிறேன் என்று முதலில் பார்ப்பேன். ஆடுகளம் புற்கள் நிறைந்து காணப்பட்டால் அதன் பிறகு பேட்டிங்கில் தாக்குதல் ஆட்டத்தை தொடுக்க முயற்சிப்பேன். அப்போது தான் அணியை முன்னெடுத்து செல்ல முடியும். அது கைகூடாவிட்டாலும், நமது முயற்சி சரியே என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அதீத எச்சரிக்கையுடன், குறிப்பாக வெளிநாடுகளில் அந்த பாணியில் ஆடும்போது அது பலன் அளிக்காது என்று நம்புகிறேன். இதேபோல் ஆடுகளத்தன்மை மற்றும் சீதோஷ்ண நிலை குறித்து அளவுக்கு அதிகமாக சிந்தித்துக் கொண்டிருந்தால், உங்களது இயல்பான பேட்டிங்கில் முழுமையாக கவனம் செலுத்த முடியாமல் போய் விடும்.நாம் சில சமயங்களில் பேட்டிங் நுணுக்கங்கள் குறித்து அதிகமாக விவாதிக்கிறோம். ஆனால் மனநிலை தெளிவாக இருந்தால், எந்த சீதோஷ்ண நிலையும் எளிதுதான். நேர்மறையான எண்ணத்துடனும், நம்பிக்கையுடனும் பேட்டிங் செய்தால், ‘களத்தில் பந்தின் தாக்கம் இருக்கிறது அல்லது பந்து வீச்சு கடினமாக இருக்கிறது’ என்ன எண்ணம் தோன்றாது. நாங்கள் எப்போதும் போட்டிக்கு உகந்த நல்ல மனநிலையுடன்தான் இறங்குவோம். ஆனால் இந்த ஆட்டத்தில் இதை சரியாக செய்ய இயலவில்லை. அவ்வாறு செய்தால் எங்களால் சாதிக்க முடியும்.இவ்வாறு கோலி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து