முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விசாரணைக்கு ஆஜராக வந்தபோது கலவரத்தை தூண்டியதாக நவாஸ் ஷெரீப் மகள் மரியம் நவாஸ் மீது வழக்கு

வெள்ளிக்கிழமை, 14 ஆகஸ்ட் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

லாகூர் : விசாரணைக்கு ஆஜராக வந்த போது கலவரத்தை தூண்டியதாக நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், அவரது கணவர் சப்தார், அவரது கட்சித் தலைவர்கள் ரானா சனவுல்லா, மிர்சா ஜாவத், ஜாவத் லத்தீப், மியான் அப்துல் ராப் மற்றும் 184 பேர் மீது வழக்கு பதிவு செய்ப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் (வயது 46). இவர் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சியின் துணைத் தலைவர் ஆவார். இவர் சட்டவிரோதமாக நிலம் கையகப்படுத்தியதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்துவதற்கு லாகூரில் லஞ்ச ஊழல் தடுப்பு படையினர் சம்மன் அனுப்பி இருந்தனர். அவர் 11-ம் தேதி அங்கு ஆஜராக வந்தார். ஆனால் அவருடன் ஏராளமான கட்சித்தொண்டர்களும் வந்திருந்தனர். 

அப்போது கட்சித்தொண்டர்களுக்கும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். கட்சித் தொண்டர்கள் அவர்கள் மீது கற்களை வீசி தாக்கினர்.

இதில் பலர் படுகாயம் அடைந்தனர். 50 பேரை போலீசார் சுற்றி வளைத்தனர். போலீஸ் நடவடிக்கை மூலம் தனக்கு தீங்கு ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மரியம் நவாஸ் குற்றம்சாட்டினார். 

இந்தநிலையில் மரியம் நவாஸ் மீதும், அவரது கட்சியினர் மீதும் கலவரத்தை தூண்டியதாக சுங் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி லாகூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் படை அலுவலகம் கூறுகையில், 

மரியம் நவாசை தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தத்தான் அழைப்பு விடுக்கப்பட்டது.  ஆனால் அவர் அவ்வாறு விசாரணைக்கு ஆஜராவதற்கு பதிலாக கணவர் சப்தார் தூண்டுதலின் பேரில், பாகிஸ்தான் முஸ்லீம்லீக் (நவாஸ்) கட்சி தொண்டர்களை கலவரம் செய்ய தூண்டினார்.

எனவேதான் மரியம் நவாஸ், அவரது கணவர் சப்தார், அவரது கட்சித்தலைவர்கள் ரானா சனவுல்லா, மிர்சா ஜாவத், ஜாவத் லத்தீப், மியான் அப்துல் ராப் மற்றும் 184 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து