விஜயகாந்த் விரைவில் பூரண உடல் நலத்துடன் வீடு திரும்புவார்: பிரேமலதா

வியாழக்கிழமை, 24 செப்டம்பர் 2020      தமிழகம்
premalatha-2020 09 24

விஜயகாந்த் பூரண உடல் நலத்துடன் உள்ளார், விரைவில் வீடு திரும்புவார் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்(வயது 68) உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் மாலை விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார்.  இதனையடுத்து விஜயகாந்திற்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, அவருக்கு தொடர்ந்து கொரோனாவிற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.  இதனைத்தொடர்ந்து தே.மு.தி.க. பொதுச் செயலாளர் விஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் உள்ளதாகவும், அவர் வழக்கமாக 6 மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு செல்வது வழக்கம் என்றும் மருத்துவமனைக்கு சென்ற போது லேசாக தென்பட்ட கொரோனா அறிகுறி, உடனடியாக சரி செய்யப்பட்டு விட்டது என்றும் தே.மு.தி.க. தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் விஜயகாந்த் பூரண உடல் நலத்துடன் உள்ளார் என்றும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பூரண உடல் நடத்துடன் இருக்கிறார். நாங்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டோம். எங்களுக்கு நெகட்டிவ் வந்தது. விஜயகாந்திற்கு மட்டும் லேசான அறிகுறி இருந்தது. மருத்துவமனை அறிக்கையும் தே.மு.தி.க. அறிக்கையும் ஒன்றுதான். சிறு அறிகுறியுடன் சிகிச்சை பெற்றுவரும் விஜயகாந்த் இன்னும் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். விஜயகாந்த் நலம் பெற வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். 

மேலும், வீட்டில் நோட்டீஸ் ஒட்டக்கூடாது என்று கூறவில்லை என்றும், தனிமைப்படுத்துதல் வீடு என மாநகாராட்சி நோட்டீஸ் ஒட்டுவதில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றும், அரசின் அனைத்து விதிகளையும் மதிக்கும் கட்சி தே.மு.தி.க. என்பது எல்லோருக்கும் தெரியும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து