இசை உலகில் 50 ஆண்டுகள் கோலோச்சிய பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி. காலமானார்

வெள்ளிக்கிழமை, 25 செப்டம்பர் 2020      தமிழகம்
SBB 2020 09 25

Source: provided

சென்னை : இசை உலகில் கிட்டத்தட்ட 50 ஆண்டு காலம் கொடி கட்டி பறந்த பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேற்று காலமானார். அவரது மறைவு அவரது ரசிகர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. அவரது உடலுக்கு திரளான பொதுமக்களும், திரையுலக பிரபலங்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மாநில முதல்வர்கள் என அனைவரும் எஸ்.பி.பி.யின் மறைவுக்கு தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். அவரது உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.  

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் (வயது 74).  திரையுலகில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் 50 ஆண்டுகளாக பல்லாயிரம் பாடல்களை பாடி சாதனை நிகழ்த்திய அவருக்கு கடந்த மாதம் 5-ம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டு சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள எம்.ஜி.எம். தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். லேசான கொரோனா அறிகுறிகள் உள்ளன என்றும் விரைவில் குணமாகி வீடு திரும்பி விடுவேன் என்றும் வீடியோவில் அவர் பேசி இருந்தார். 

இந்த நிலையில் கடந்த மாதம் 13-ம் தேதி அவரது உடல்நிலை மோசம் அடைந்ததால் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றினர். செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவிகள் பொருத்தியும் வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை பெற்றும் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.  நடிகர், நடிகைகள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவர் குணமடைய கூட்டு பிரார்த்தனை செய்தனர்.

அதன்பிறகு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் விழிப்புடன் இருக்கிறார் என்றும் பேசுவதை புரிந்து கொள்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது.  எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக வெளியான தகவலை அவரது மகன் எஸ்.பி.பி.சரண் மறுத்தார். கொரோனா தொற்றில் இருந்து மீண்டு விட்டார் என்றும் கூறினார்.

இதனால் ரசிகர்களும் திரையுலகினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.  51 நாட்களாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை மீண்டும் திடீரென்று மோசம் அடைந்தது.

இது குறித்து மருத்துவமனை உதவி இயக்குனர் டாக்டர் அனுராதா பாஸ்கரன் நேற்று முன்தினம் வெளியிட்ட மருத்துவ அறிக்கையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த 5-ம் தேதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு எக்மோ உள்ளிட்ட இதர உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் மோசம் அடைந்தது.

இதையடுத்து அவருக்கு அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது. உடல்நிலையை மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் நேற்று காலமானார்.  பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நேற்று பிற்பகல் 1.04 மணிக்கு காலமானார் என்று இயக்குனர் வெங்கட்பிரபு தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல், தனியார் மருத்துவமனையில் இருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு  நேற்று மாலை 4 மணியளவில் கொண்டு வரப்பட்டது. எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல் , அஞ்சலிக்காக நேற்று இரவு முழுவதும் நுங்கம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டு இருந்தது.

எஸ்.பி.பி உடலுக்கு பொதுமக்கள் ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.  கொரோனா தொற்று காலம் என்பதால், கட்டுப்பாடுகளுடன் இறுதி அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.  இன்று காலை எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல், செங்குன்றம் தாமரைபாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. 

முதல்வர் அறிவிப்பு

மரணமடைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடன் நேற்று இரவு அவரது பண்ணை வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் எஸ்.பி.பி.யின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.பி.யின் மறைவுக்கு ஜனாதிபதி முதல் மாநில தலைவர்கள் வரை அனைவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது மறைவால் அவரது ரசிகர்கள் சோகக்கடலில் மூழ்கியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து