முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பையில் ரூ.15 ஆயிரம் கோடியில் முகேஷ் அம்பானியின் பிரமாண்ட பங்களா

திங்கட்கிழமை, 30 நவம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை : தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு மும்பையில் அன்டிலியா என்ற பங்களா உள்ளது. இது மிகவும் விலை மதிப்புமிக்க தனியார் சொத்துக்களில் ஒன்றாகவும், மும்பை மாநகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

இந்த பங்களாவின் மதிப்பு ரூ.15 ஆயிரம் கோடி ஆகும். இந்த பங்களாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை முகேஷ் அம்பானி வெளியிட்டுள்ளார். தனது மனைவி நீட்டா மற்றும் குழந்தைகள் ஆனந்த், ஆகாஷ், இஷா ஆகியோருடன் உள்ள புகைப் படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இஷா திருமணம் ஆகி கணவர் ஆனந்த் பிரமளுடன் வோர்லி பங்களாவில் தற்போது வசித்து வருகிறார். இந்த பங்களா பற்றிய தகவல்களை விக்கிபீடியாவும் வெளியிட்டுள்ளது.

இந்த பங்களாவில் 27 தளங்கள் உள்ளன. இந்த பங்களா இங்கிலாந்தில் உள்ள பக்கிங்காம் அரண்மனைக்கு அடுத்தபடியாக மிகவும் அதிக விலைமதிப்பு கொண்ட பங்களாவாக கருதப்படுகிறது.

அட்லாண்டிக் பெருங்கடல் அருகில் அமைந்துள்ள அன்டிலியா தீவின் பெயரே இந்த பங்களாவுக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த பங்களா 27 தளங்களை கொண்டிருந்தாலும் அதன் உயரத்துக்கு இணையாக சாதாரண அடுக்குமாடி குடியிருப்புகளில் 60 தளங்களை கட்டமுடியும். அந்த அளவுக்கு இந்த பங்களாவின் ஒவ்வொரு தளமும் அதிக உயரம் கொண்டதாக உள்ளது.

பங்களாவின் மேல் தளத்தில் 3 ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 128 கார்களை நிறுத்தும் வசதியும் உள்ளது. மிகவும் வேகமாக செல்லும் 9 விரைவு லிப்டுகளும் உள்ளன.

மேலும் 50 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து படம் பார்க்கும் திரை அரங்கம், மேற்கூரையில் 3 தொங்கும் தோட்டம், நீச்சல்குளம், ஸ்பா, ஹெல்த் சென்டர், கோவில், பனி அறை ஆகியவையும் உள்ளன. 24 மணிநேரமும் பணியாற்ற வசதியாக 600 பணியாளர்கள் தங்குவதற்கான இடவசதியும் இந்த பங்களாவில் உள்ளது.

சூரியன் மற்றும் தாமரை வடிவமைப்புகளை கொண்டதாக இந்த பங்களா கட்டப்பட்டுள்ளது. 8 ரிக்டர் அளவு வரையிலான பூகம்பத்தை தாங்கும் சக்தி கொண்டது. இந்த பங்களா கட்டும் பணிகள் 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்டன. 2012-ம் ஆண்டு முகேஷ் அம்பானி குடும்பத்தினர் இந்த பங்களாவில் குடியேறினர்.

இந்த பங்களா இடம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளும் ஏற்கனவே உருவானது. அனாதை குழந்தைகள் நலனுக்காக வக்பு வாரியத்துக்கு சொந்தமான இந்த இடத்தை விற்று அதில் கிடைத்த தொகை மூலம் ஏழை குழந்தைகள் படிப்புக்கு உதவ முடிவு செய்யப்பட்டது. அப்போது இந்த நிலத்தின் விற்பனை தொடர்பாக வக்பு துறை மந்திரி நவாப் மாலிக் மற்றும் வருவாய் துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பல்வேறு சட்ட சிக்கல்களுக்கு இடையே முகேஷ் அம்பானி 1.6 கோடி தொகையை செலுத்தி தடையில்லா சான்று பெற்றார். பங்களாவின் மாடியில் 3 ஹெலிபேடு அமைக்க கடற்படையும், சுற்றுச்சூழல் அமைச்சகமும் எதிர்ப்பு தெரிவித்தது. பின்னர் அதற்கான அனுமதி பெறப்பட்டது.

2012-ம் ஆண்டு முகேஷ் அம்பானி இந்த பங்களாவில் குடியேறிய பிறகு உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 4-ம் இடத்தை பிடித்தார். தற்போது ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து