தடுப்பூசி: சொந்த தொழில்நுட்பம் மீதான நம்பிக்கையை உலகிற்கு காட்டுங்கள்: நிதி ஆயோக் உறுப்பினர் வேண்டுகோள்

சனிக்கிழமை, 16 ஜனவரி 2021      இந்தியா
VK-Paul 2021 01 05

Source: provided

புதுடெல்லி : பொதுமக்கள் தடுப்பூசியை போட்டுக் கொள்வதுடன், நமது சொந்த தயாரிப்புகள் மீதான நம்பிக்கையை உலகத்திற்கு காட்ட வேண்டும் என நிதி ஆயோக் உறுப்பினர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி மருந்துகளான கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய மருந்துகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து, இந்த மருந்துகளைப் பயன்படுத்தி தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. 

இந்நிலையில் தடுப்பூசி திட்டம் பற்றி நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் கூறியதாவது:- 

குறுகிய காலத்தில் தடுப்பூசிகளை உருவாக்குவது போன்ற ஒரு முன்னணி தொழில்நுட்பத்தில், இந்திய மக்களைப் பாதுகாப்பதில் நாம் சுயசார்பு நிலையை எட்ட முடியும் என்பதை நிரூபித்துள்ளோம்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகள்  உரிமம் பெற்றுள்ளன. இரண்டும் சிறந்த தடுப்பூசிகள். பொதுமக்கள் இந்த மருந்துகளை போட்டுக்கொள்வதுடன், நமது சொந்த தயாரிப்புகள், சொந்த விஞ்ஞானம், சொந்த தொழில்நுட்பம் மீதான நம்பிக்கையை உலகத்திற்கு காட்டுங்கள். ஒழுங்குமுறை அமைப்பில் நம்பிக்கை மற்றும் மத்திய, மாநில அரசுகள் மீதான நம்பிக்கையையும் காட்டுங்கள்.  மூன்றாம் கட்ட சோதனை இன்னும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பைசர், மாடர்னா மருந்துகளின் மூன்றாம் கட்ட சோதனை கூட நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால் பரிசோதனை முடிவுகள் தொடர்பான தரவைப் பாருங்கள், அபாயத்துடன் ஒப்பிடும்போது நன்மைகள் மிக அதிகம். இந்த காலகட்டத்தில் என்ன தேவை என்பதை உறுதிப்படுத்தவும், முன்னேறவும், நன்மைகளைப் பெறவும் உலகம் முடிவு செய்துள்ளது.  ஆயிரக்கணக்கான நபர்களுக்கு செலுத்தி மருந்துகளின் பாதுகாப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.

மிகவும் மாறுபட்ட, கடினமான மற்றும் அசாதாரண சூழ்நிலைகளில் வெளிவந்த அறிவியல் கண்டுபிடிப்புகளை நாம் மதிக்க வேண்டும். இன்று 2 சிறந்த தடுப்பூசிகள் கிடைக்கின்றன. உங்களுக்கு எந்த தடுப்பூசி ஒதுக்கப்பட்டாலும், அதை மறுக்காமல் போட்டுக்கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து