முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காலில் அறுவை சிகிச்சை: தேர்தல் சுற்றுப்பயணத்தை ஒத்திவைத்தார் கமல்ஹாசன்

திங்கட்கிழமை, 18 ஜனவரி 2021      அரசியல்
Image Unavailable

காலில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதால் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை ஒத்தி வைத்துள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் கட்சித்தலைவருமான கமல்ஹாசன் கடந்த டிசம்பர் மாதம் 13-ந் தேதி மதுரையில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். இதுவரையில் அவர் 5 கட்ட பிரசாரத்தை நிறைவு செய்துள்ளார். இந்தநிலையில் தனது உடல்நிலை காரணமாக அவர் தேர்தல் பிரச்சாரத்தை ஒத்தி வைத்துள்ளார்.

இதுதொடர்பாக கமல்ஹாசன் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை பூர்த்தி செய்திருக்கிறேன். 5 பாகங்களாக 5 ஆயிரம் கி.மீ. தூரம் பயணித்து தமிழ் மக்களை சந்திந்திருக்கிறேன்.

அதுபோலவே, கொரோனா பொதுமுடக்கத்தின் போது தொடங்கிய, ‘பிக்பாஸ் -சீசன் 4’ தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் வெற்றிகரமாக முடித்திருக்கிறேன். இதுவும் மக்களுடனான பயணம் தான். நான்கரை கோடி தமிழர்களோடு வாராவாரம் உரையாடியதும், உறவாடியதும் மகிழ்ச்சியூட்டுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்தில் காலில் ஒரு அறுவை சிகிச்சை செய்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக இன்னொரு ‘சர்ஜரி’ (அறுவை சிகிச்சை) செய்ய வேண்டி இருந்தது. அதுவரை ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தார்கள். அதை மீறித்தான் சினிமா வேலைகளும், அரசியல் சேவைகளும் தொடர்ந்தன. பிரச்சாரத்தை தொடங்கும்போதே, காலில் நல்ல வலி இருந்தது. அதற்கு மக்களின் அன்பே மருந்தாக அமைந்தது. இப்போது சிறிய ஓய்வு கிடைத்திருக்கிறது. ஆகவே காலில் ஒரு சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறேன். சில நாட்கள் ஓய்வுக்கு பின் மீண்டும் என் பணிகளை தொடர்வேன்.

மக்களை நேரில் சந்திக்க இயலாது எனும் மனக்குறையை தொழில்நுட்பத்தின் வாயிலாக போக்கிக்கொள்ளலாம். இந்த மருத்துவ விடுப்பில் உங்களோடு இணையம் வழியாகவும், வீடியோக்கள் வழியாகவும் பேசுவேன். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து