எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்: பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு பிரதமர் அறிவுறுத்தல்

Modi 2021 07 23

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்றத்தை நடத்த அனுமதிக்கவிட மறுக்கிறார்கள் என்று மக்களிடம் சென்று எடுத்துக் கூறுங்கள் என்று பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். 

பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம், விவசாயிகள் பிரச்சினை, பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த வாரத்திலிருந்து பாராளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கி வருகின்றன.  குறிப்பாக பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், இந்த விவாரத்தில் எந்தவிதமான ஒட்டுக்கேட்பும் நடக்கவில்லை, யாருடைய செல்போனும் கண்காணிக்கப்படவில்லை என்று மத்திய அரசு மறுக்கிறது.

இந்நிலையில் பா.ஜ.க. எம்.பிக்களின் பாராளுமன்றக் குழுக்கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. இதில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.  இந்தக் கூட்டத்தில் பேசப்பட்டது குறித்து பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாராளுமன்றத்தை நடத்துவதற்கு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் அனுமதிக்க மறுக்கிறார்கள் என்று மக்களை சந்தித்து பா.ஜ.க. எம்.பி.க்கள் விளக்க வேண்டும். எந்த விவகாரத்தையும் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது, ஆனால், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபடுகிறார்கள் என்பதை தெளிவுபடுத்துங்கள் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

75-வது ஆண்டு சுதந்திர தினம் என்பது அரசின் நிகழ்ச்சியாக இருக்க கூடாது. மக்களின் பங்கேற்போடு மக்களின் இயக்கமாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.  மக்கள் நம்மை ஆசிர்வதித்துள்ளதால், தேசத்துக்கு சேவை செய்ய நமக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. 2022,ஆகஸ்ட் 15 முதல் 2023 ஆகஸ்ட் 15 வரை ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் இரு பா.ஜ.க. உறுப்பினர்களைத் தேர்வு செய்து, அவர்களை 75 கிராமங்களில் 75 மணி நேரம் பிரச்சாரம் செய்ய வைக்க வேண்டும், மக்களிடம் இருந்து கருத்துகள், ஆலோசனைகள், தேசத்தின் வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து கேட்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.  இவ்வாறு அர்ஜுன் மேக்வால் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து