மேற்கத்திய நாடுகளை நம்புவதால் பயனில்லை: ஈரான் மூத்த மத தலைவர் சொல்கிறார்

Ayatollah-Ali-2021-07-29

மேற்கத்திய நாடுகளை நம்புவதால் பயனில்லை என்று ஈரான் மூத்த மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார். 

ஈரான் அணு ஆயுத ஒப்பத்தம் தொடர்பாக எழுந்த கேள்விக்கு, அவர் இவ்வாறு பதில் அளித்தார்.

இதுகுறித்து அயத்துல்லா அலி காமெனி கூறும்போது மேற்கத்திய நாடுகளை நம்புவதால் எந்தப் பயனும் இல்லை. எதிர்கால அரசுகள் இதனை உணர்ந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

முன்னதாக, ஈரானின் அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது தொடர்பான விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பேச்சுவார்த்தை நடத்த கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து அதிபர் ஹசன் ரவ்ஹானி முயன்று வருகிறார்.

இதற்கான வாய்ப்பு உருவாகி வந்த நிலையில், அடுத்த மாதம் ஈரானின் அதிபராகப் பதவியேற்கும் இப்ராஹிம் ரைசி ஆட்சிக் காலத்திலேயே ஈரான் - அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கும் சூழல் உருவாகியுள்ளது.

அனைத்து விதிமுறைக் கட்டுப்பாடுகளுக்கும் ஈரான் ஒப்புக்கொண்டால் அணு ஆயுத ஒப்பத்தத்தில் இணைவதில் அமெரிக்கா தயாராக இருக்கிறது என்று ஜோ பைடன் தெரிவித்தார்.

அமெரிக்கா உள்ளிட்ட 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ல் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஆக்கபூர்வத் தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் அந்நாடு எவ்வளவு யுரேனியம் இருப்பு வைத்துக் கொள்ளலாம், எந்த அளவுக்கு அதைச் செறிவூட்டலாம் என்ற வரம்பு விதிக்கப்பட்டது.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி அதிலிருந்து விலகினார். மேலும், ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்து வந்தார். இதற்கு பதிலடியாக ஈரான் அணுசக்தி ஒப்பந்த விதிகளை அடுத்தடுத்து மீறியது. 

இந்நிலையில் டெஹ்ரானுக்கு தெற்கே ஃபோர்டோ என்ற இடத்தில் மலைக்கு அடியில் உள்ள ஆலையில் 2015-ல் நிறுத்தப்பட்ட யுரேனியம் செறிவூட்டும் பணியை ஈரான் நவம்பர் மாதம் தொடங்கியது. இதன் காரணமாக ஈரான் - அமெரிக்கா இடையே மோதல் வலுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து