சர்வதேச புலிகள் தினம்; கானுயிர் ஆர்வலர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Tiger-Day-2021-07-29

சர்வதேச புலிகள் தினமான நேற்று பிரதமர் நரேந்திர மோடி புலிகள் பாதுகாப்பில் ஆர்வமுள்ள கானுயிர் ஆர்வலர்களுக்கு, வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சர்வதேச புலிகள் தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. 2010-ம் ஆண்டு ரஷ்யாவின் செயின்ட்பீட்டர்ஸ்பர்கில் நடைபெற்ற மாநாட்டில் ஜூலை 29-ம் தேதியை சர்வதேச புலிகள் தினமாக கடைப்பிடிப்பது என முடிவு செய்யப்பட்டது.

புலிகளைப் பாதுகாக்கவும், அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி கானுயிர் ஆர்வலர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

சர்வதேச புலிகள் தினத்தன்று கானுயிர் ஆர்வலர்களுக்கு, குறிப்பாக புலிகள் பாதுகாப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்த்துகள். உலகளவில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட புலிகள் வசிக்கும் இடமாக இருக்கும் நமது நாட்டில், நமது புலிகளுக்கு பாதுகாப்பான வாழ்விடங்களை உறுதி செய்வதற்கும், புலிகளுக்கு நட்பான சூழல் அமைப்புகளை வளர்ப்பதற்குமான நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

இந்தியாவில் 18 மாநிலங்களில் 51 புலிகள் சரணாலயங்கள் உள்ளன. 2018 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கடைசி புலிகள் தொகை கணக்கெடுப்பில், புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. புலிப்பாதுகாப்பு குறித்த செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பிரகடனத்தின் இலக்கான, புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் இலக்கை நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்தியா அடைந்தது.

இந்தியாவின் புலிகள் பாதுகாப்பு உத்தியில் உள்ளூர் சமூகங்களை ஈடுபடுத்துவது மிக முக்கியமானதாக உள்ளது. நமது புவிக்கோளை பகிர்ந்து கொள்ளும் அனைத்து தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுடன் இணக்கமாக வாழும் பல நூற்றாண்டுகள் பழமையான நெறிமுறைகள் நமக்கு ஊக்கமளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து