அடக்குமுறைகளை கேள்வி கேட்ட பாரதியின் சிந்தனை இன்றைக்கும் தேவை: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

Stalin 2020 07-18

Source: provided

சென்னை: குடும்பம், சாதி, மதம், அரசு என எந்த அடக்குமுறையையும் கேள்வி கேட்டவர் பாரதி. அவரின் சிந்தனைகள் இன்றைக்கும் தேவைப்படுகின்றன என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தில் வானவில் பண்பாட்டு மையம் சார்பில் மகாகவி பாரதியாரின் நினைவு நாள் நூற்றாண்டு விழா நேற்று நடந்தது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பாரதி சுடரை ஏற்றி வைத்தார். அதைத் தொடர்ந்து விழாவில் அவர் பேசியதாவது:-

பல ஆயிரம் சிந்தனைகள் கொண்டவர் பாரதியார். அந்த சிந்தனைகள் யாருக்கும் கட்டுப்படாத சிந்தனைகள், சுதந்திர சிந்தனைகள் ஆகும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் அடக்கமுடியாத சிந்தனைகள் கொண்டவராக பாரதி இருந்ததால்தான் அவரை இன்றும் போற்றிக் கொண்டாடி கொண்டிருக்கிறோம்.

குடும்பமாக இருந்தாலும் சாதியாக, மதமாக, அரசாக இருந்தாலும் எந்த அடக்குமுறையையும் கேள்வி கேட்டவர் பாரதியார். கடந்த ஆகஸ்ட் 15-ம் நாள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து விட்டுப் பேசும் போது, மகாகவி பாரதியார் மறைந்து நூறு ஆண்டுகள் ஆகி விட்டன. அவர் மறைந்து இது நூற்றாண்டு என்று தெரிவித்திருந்தேன்.

பாரதி மறைந்தாலும் அவரது கவிதை வரிகள் மறையாது. அவை மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும். பாரதி அச்சிட்ட புத்தகங்கள் மறைந்தாலும் மக்களின் மனதில் உள்ள வரிகளைக் கொண்டு அவற்றை மீண்டும் அச்சிடலாம். அத்தகைய வலிமை பாரதியின் படைப்புகளுக்கு உண்டு. அச்சம் தவிர், உடலினை உறுதி செய், ஏறுபோல் நட, கொடுமையை எதிர்த்து நில், சூரரைப் போற்று, தெய்வம் நீ என்று உணர், புதியன விரும்பு, போர்த்தொழில் பழகு என்ற அவரது புதிய ஆத்திசூடி வரிகள் எல்லாம் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் எழுச்சியையும் உணர்ச்சியையும் ஊட்டக்கூடியவை. அதனால்தான் அவரை மக்கள் கவி என்று 1947-ம் ஆண்டே அண்ணா கூறினார்.

பாரதியின் பாதை புதிய பாதை. பரங்கியரை ஓட்டி விடுவது மட்டுமல்ல, நாட்டுக்குக் கேடு தரும் அனைத்தையும் ஓட்டி, புதிய சமூகம் அமைக்கும் பாதைதான் பாரதியின் பாதை. அந்தப் பாதையை நாம் போற்றுவோம் என்று அண்ணா கூறியிருந்தார். அந்த வழியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி எட்டயபுரத்தில் பாரதியார் வாழ்ந்த வீட்டை அரசு செலவில் விலைக்கு வாங்கி அதை நினைவில்லமாக மாற்றிப் பெருமை சேர்த்தார். 1973-ல் பாரதியார் இல்லத்தை வரலாற்றுச் சின்னமாக அறிவித்து அன்றைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து