முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல் கொள்முதலை துரிதப்படுத்துங்கள் தமிழக அரசுக்கு எடப்பாடி கோரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 19 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை: நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதலை துரிதப்படுத்துங்கள் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

இது குறித்து அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

ஏற்கெனவே எனது அறிக்கையில்‌ தமிழகத்தில் குறிப்பாக இந்த சீசனில்‌ டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ ஏரிப்‌பாசனம்‌ மூலம்‌ நெல்‌ பயிரிட்ட மாவட்டங்களில்‌, நேரடி நெல்‌ கொள்முதல்‌ நிலையங்களில்‌ தி.மு.க. நிர்வாகிகள்‌, ஆளும்‌ கட்சியினர்‌ என்ற அதிகாரத்தை‌ பயன்படுத்தி தாங்கள்‌ டோக்கன்‌ கொடுக்கும்‌ விவசாயிகளிடம்‌ மட்டும்தான்‌ நெல்‌ கொள்முதல்‌ செய்ய வேண்டும்‌ என்று அதிகாரிகளை மிரட்டுவதாக செய்திகள்‌ வந்துள்ளன. மேலும்‌ நாள்‌ ஒன்றுக்கு 40 கிலோ எடையுள்ள 1000 மூட்டைகள்‌ மட்டுமே கொள்முதல்‌ செய்யப்படுவதாக, பாதிக்கப்படும்‌ விவசாயிகள்‌ கூறுகிறார்கள்‌. எனவே, அரசு உடனே தலையிட்டு வேளாண்‌ பெருமக்கள்‌ விற்பனைக்கு கொண்டு வரும்‌ நெல்மணிகள்‌ அனைத்தையும்‌ உடனடியாக‌ கொள்முதல்‌ செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்‌ என்று தமிழக அரசை‌ கோரியிருந்தேன்‌; ஊடகங்கள்‌ வாயிலாக பேட்டிகளும்‌ அளித்திருந்தேன்‌.

மேலும்‌, நேரடி நெல்‌ கொள்முதல்‌ நிலையங்களில்‌, நெல்‌ கொள்முதல்‌ செய்வது தாமதம்‌ ஆவதால்‌, வேளாண்‌ பெருமக்கள்‌ கொண்டு வரும்‌ நெல்மணிகள்‌ மழையில்‌ நனைந்து முளைத்துள்ளன. இதனால்‌ விவசாயிகள்‌ பெரும்‌ நஷ்டத்திற்கு உள்ளாவதால்‌, அதுகுறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்‌ ஒன்றையும்‌ சட்டமன்றத்தில்‌ கொண்டுவர முயன்றேன்‌. ஆனால்‌, அது எடுத்து கொள்ளப்படவில்லை. இது குறித்து நான்‌ சட்டமன்றத்தில்‌ பேசிய போது, அதற்கு பதிலளித்த உணவு துறை அமைச்சர்‌,  ஒரு சில புள்ளி விவரங்களைக் கூறி, விவசாயிகள்‌ நேரடி நெல்‌ கொள்முதல்‌ நிலையங்களுக்கு கொண்டு வரும்‌ நெல்‌ மூட்டைகள்‌ அனைத்தையும்‌ கொள்முதல்‌ செய்ய அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளதாக‌ தெரிவித்தார்‌. மேலும்‌ அவர்‌, விவசாயிகள்‌ என்ற போர்வையில்‌ வியாபாரிகள்‌ கொண்டுவரும்‌ நெல்‌ மூட்டைகள்‌ மட்டும்‌ கொள்முதல்‌ செய்யப்படுவதில்லை என்றும்‌ பதில்‌ அளித்தார்‌.

அப்போது நான்‌, நேரடி கொள்முதல்‌ நிலையங்களுக்கு கிராம நிர்வாக அலுவலரின்‌ சான்றிதழுடன்‌ தங்கள்‌ நிலத்திற்கான பட்டா மற்றும்‌ அடங்கல்‌ உடன்‌ நெல்‌ மூட்டைகளை‌ கொண்டு வரும்‌ விவசாயிகளிடம்‌ அதிகாரிகள்‌ தாமதமின்றி நெல்‌ கொள்முதல்‌ செய்ய உத்தரவிட வேண்டுமென்று  அமைச்சரிடம்  கோரினேன்‌. அவரும்‌ அதிகாரிகளுக்கு அவ்வாறே உத்தரவு வழங்கப்படும்‌ என்று கூறினார்‌. ஆனால்‌, இன்னும்‌ பல நேரடி கொள்முதல்‌ நிலையங்களில்‌, நெல்‌ கொள்முதல்‌ முழு அளவில்‌ நடைபெறவில்லை என்றும்‌, டோக்கன்‌ வழங்கி 15 நாட்களுக்கு மேலாகியும்‌, விவசாயிகள்‌ நெல்‌ கொள்முதல்‌ நிலையங்களிலேயே காத்திருப்பதாகவும்‌, நெல்‌ மூட்டைகள்‌ மழையினால்‌ முளை விட்டுள்ளதாகவும்‌ செய்திகள்‌ வருகின்றன. 

குறிப்பாக, கடலூர்‌ மாவட்டத்தில்‌ பல இடங்களில்‌ சாக்கு இல்லை, எனவே நீங்களே சாக்கு வாங்கி வாருங்கள்‌ என்று விவசாயிகளிடம்‌ கூறுதல்‌, தார்ப்பாய்‌ இல்லை, நெல்‌ வைப்பதற்கு இடம்‌ இல்லை என்று கொள்முதல்‌ நிலைய அதிகாரிகள்‌ தட்டிக்கழிப்பதாகவும்‌, இதனால்‌ விவசாயிகள்‌ கொண்டு வந்த நெல்மூட்டைகள்‌ மழையில்‌ நனைந்து வீணாகும்‌ நிலை உள்ளது என்று ஊடகங்களில்‌ செய்திகள்‌ வெளிவருகின்றன. மேலும்‌, திட்டக்குடி தாலுக்காவில்‌ தர்ம குடிகாடு கொட்டாரம்‌, போத்திர மங்களம்‌, வையங்குடி, சாத்தநத்தம்‌, ஆதமங்கலம்‌ ஆகிய ஊர்களில்‌ இயங்கி வந்த நேரடி நெல்‌ கொள்முதல்‌ நிலையங்கள்‌ தற்போது இயங்கவில்லை என்றும்‌, இதுபோல்‌ கடலூர்‌ மாவட்டம்‌ முழுவதும்‌ பல இடங்களில்‌ கொள்முதல்‌ நிலையங்கள்‌ இயங்கவில்லை என்றும்‌ செய்திகள்‌ வந்துள்ளன. இதனால்‌ விவசாய‌ பெருமக்கள்‌ பெரிதும்‌ பாதிப்படைந்துள்ளனர்‌.

தற்போது நெல்‌ விளைச்சல்‌ அதிகமுள்ள மாவட்டங்களில்‌ செயல்பட்டு வந்த பல நேரடி நெல்‌ கொள்முதல்‌ நிலையங்கள்‌ மூடப்பட்டுள்ள. எனவே, அவற்றை விவசாயிகளின்‌ நலன்‌ கருதி, காலம்‌ தாழ்த்தாமல்‌ உடனடியாக‌ திறக்கவும்‌, அதற்கு தேவையான சாக்குப்‌பை, தார்ப்பாய்‌ போன்றவற்றை உடனடியாக வழங்க வேண்டும்‌ என்றும்‌, இதன்மூலம்‌ வேளாண்‌ பெருமக்களின்‌ உழைப்புக்கு தக்க பலன்‌ கிடைத்திட செய்ய வேண்டும்‌ என்றும்‌ இந்த தி.மு.க. அரசை‌ கேட்டுக் கொள்கிறேன்‌ என்று அதில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து