முக்கிய செய்திகள்

அமெரிக்காவுக்கு நாடுகடத்தல்

திங்கட்கிழமை, 25 அக்டோபர் 2021      உலகம்
Tyro-Usuka 2021 10 25

Source: provided

டைரோ ஆன்டொனியோ உசுகா கடந்த சனிக்கிழமை கொலம்பியாவின் விமானப்படை, ராணுவம், காவல் துறையினரின் கூட்டு ஆப்ரேஷனில் கைது செய்யப்பட்டார். அவர் அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்படுவார் என கொலம்பியா அறிவித்துள்ளது. 

அமெரிக்கா டைரோ உசுகாவுக்கு ஐந்து மில்லியன் டாலர் பரிசுத் தொகை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.டைரோ 2003 முதல் 2014 ஆண்டுகளுக்கு மத்தியில் குறைந்தபட்சமாக 73 மெட்ரிக் டன் கொகைன் போதைப் பொருளை இறக்குமதி செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

_______________

உகாண்டாவில் குண்டு வெடிப்பு

அக்டோபர் 23-ம் தேதி இரவு உகாண்டாவின் தலைநகரான கம்பலாவில் உள்ள ஒரு பாரில் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. அதில் 20 வயதான பார் சேவை வழங்கும் பெண் பலியானார். மூன்று பேர் காயமடைந்துள்ளனர். வாடிக்கையாளர்களைப் போல வந்த மூன்று பேர் வெடிகுண்டை, பாரில் இருந்த மேசைக்கு அடியில் வைத்துவிட்டு சென்றதாக காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவத்துக்கு இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ எஸ் அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர். ஒரு வார காலத்துக்கு முன்பு தான், உகாண்டாவில் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக பிரிட்டன் அரசு எச்சரித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

_____________

ரூ.800 கோடிக்கு ஏலம் போன பிக்காஸோவின் ஓவியங்கள் 

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக லாஸ் வேகாஸ் ஹோட்டலில் காட்சிக்கு வைக்கப்பட்ட பாப்லோ பிக்காஸோவின் கலைப் படைப்புகள் சுமார் 800 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன. எம்.ஜி.எம் ரிசார்ட்ஸுக்குச் சொந்தமான இந்தப் படைப்புகள், பெல்லாஜியோ ஹோட்டலில் உள்ள பிக்காசோ உணவகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

ஏலம் விடுவதன் மூலம் கலைப் படைப்புகளின் பன்முகத் தன்மையை மேம்படுத்தப் போவதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. 1973 இல் இறந்த ஸ்பெயின் கலைஞரான பிக்காஸோவின் ஒன்பது ஓவியங்கள் மற்றும் இரண்டு பீங்கான் படைப்புகள் இந்த ஏலத்தில் இடம்பெற்றன.

_____________

சிறப்பாக கொண்டாடப்பட்ட சர்வதேச கலைஞர்கள் தினம் 

கலைஞர்களையும் அவர்களின் அனைத்து பங்களிப்புகளையும் கெளரவிக்கும் வகையில் சர்வதேச கலைஞர்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. ஓவியர், சிற்பி, பீங்கான் கலைஞர், கவிஞர் மற்றும் நாடக ஆசிரியர் என பன்முகத் திறமை கொண்ட ஸ்பானிஷ் கலைஞரான பாப்லோ பிக்காசோவைக் நினைவு கூறும் வகையில் அவரது பிறந்தநாளான அக்டோபர் 25ல் இந்த தினம் கொண்டாடப்படுகிறது,

கலைஞர்கள் சமூகத்திற்கு வழங்கிய பங்களிப்புகளை கொண்டாடும் வகையில் கனடாவைச் சேர்ந்த புகழ்பெற்ற கலைஞரான கிறிஸ் மேக்ளூர் 2004 ஆம் ஆண்டு சர்வதேச கலைஞர்கள் தினத்தைத் தொடங்கினார். அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 25 ந்தேதி சர்வதேச கலைஞர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 

________________

பெருவில் 2 லட்சத்தை தாண்டிய கொரோனா பலி

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பட்டியலில் பெரு 21-வது இடத்தில் உள்ளது. 

இந்நிலையில், பெரு நாட்டில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22 லட்சத்தை நெருங்குகிறது. அங்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து