முக்கிய செய்திகள்

திருவண்ணாமலை தீபத் திருவிழா: 20-ம் தேதி வரை பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை

செவ்வாய்க்கிழமை, 16 நவம்பர் 2021      ஆன்மிகம்
Thiruvannamalai 16 11 2021

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி இன்று முதல் வருகிற 20-ம் தேதி வரை கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த ஆண்டை போன்றே கோவில் வளாகத்திலேயே சாமி உலா நடைபெற்று வருகிறது. காலையில் விநாயகர், சந்திரசேகரர் உலாவும், இரவில் விநாயகர், முருகர், அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் உலாவும் கோவிலின் 5-ம் பிரகாரத்தில் நடைபெற்று வருகிறது.

மேலும் அனுமதி சீட்டு பெற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான 7-ம் நாள் நடைபெறும் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நேற்று கோவில் வளாகத்திலேயே வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது. 

வழக்கமாக தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளன்றும், அந்த சமயத்தில் வரும் பவுர்ணமி அன்றும் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும், மலையை சுற்றி கிரிவலம் செல்லவும் சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வருகை தருவர். 

இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை 18-ம் தேதி (வியாழக்கிழமை) மதியம் 1.03 மணிக்கு தொடங்கி 19-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மதியம் 2.51 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக திருவண்ணாமலையில் மலையேறி சென்று மகா தீபத் தரிசனம் செய்யவும், இன்று மதியம் 1 மணி முதல் வருகிற 20-ம்  தேதி (சனிக்கிழமை) வரை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் மாவட்ட நிர்வாகத்தினால் தடை விதிக்கப்பட்டு உள்ளது. 21-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அனுமதி சீட்டு பெற்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.  திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து