முக்கிய செய்திகள்

அம்மா மினி கிளினிக் பெயர் மாற்றம்: ஓ.பி.எஸ். கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2021      அரசியல்
OPS 2021 07 12

Source: provided

சென்னை : அம்மா மினி கிளினிக் பெயர்ப் பலகைக்குப் பதில் முதலமைச்சரின் மினி கிளினிக் பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளதால் இது, தொடர்பாக முதல்வர் நடவடிக்கை எடுக்க அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மாற்றத்தைத் தருவோம் என்று கூறிவிட்டு தேர்தல் முடிவுகள் வந்த 2-வது நாளே முகப்பேர் பகுதியில் உள்ள அம்மா உணவகம் சூறையாடப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் திடீரென்று மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் தி.மு.க. தலைவரின் படத்தை ஒட்டியது என்ற வரிசையில் தற்போது சேலம் மாவட்டத்தில் அம்மா மினி கிளினிக் என்ற பெயரை மாற்றியது என ஏமாற்றத்தை தி.மு.க. அரசு தந்து கொண்டிருக்கிறது.

சேலம் நவப்பட்டி ஊராட்சி பொது சேவை மையத்தில் இயங்கும் அம்மா மினி கிளினிக் என்ற பெயர்ப் பலகையை எடுத்து விட்டு முதலமைச்சரின் மினி கிளினிக் என்ற பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளது. அந்த பெயர்ப் பலகையில் தற்போதைய முதல்வர் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் தி.மு.க. தலைவரின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருப்பதாக பத்திரிகையில் புகைப்படத்துடன் செய்தி வெளிவந்துள்ளது.

இது குறித்து மருத்துவ அதிகாரி ஒருவரிடம் விசாரித்த போது அரசு விதியை மீறி வைத்துள்ள பெயர் பலகையை அகற்றக் கோரி ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும், சுகாதாரத் துறைக்கு தகவல் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஊராட்சி ஒன்றியத் தலைவரோ இது குறித்து ஊராட்சியில் எந்த அனுமதியும் பெறப்பட்டவில்லை என்றும் இதுகுறித்து ஊராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து விட்டதாகவும் கூறியிருக்கிறார்.

இதிலிருந்து தி.மு.க.வினரின் கட்டுப்பாட்டில் அரசு அதிகாரிகள் இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. இதன்மூலம் அரசாங்க நடவடிக்கைகளில் தி.மு.க.வினர் தலையிடுகிறார்கள் என்பதும் தெள்ளத் தெளிவாக உறுதி செய்யப்படுகிறது. அண்ணா வழியில் ஆட்சி நடப்பதாகக் கூறினாலும், அவருடைய கொள்கைகளுக்கு முரணான செயல்கள் தான் தி.மு.க. ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக மக்கள் நினைக்கின்றனர்.

மேற்படி இடத்தில் அம்மா மினி கிளினிக் என்ற பெயர் பலகை முதலமைச்சரின் மினி கிளினிக் என்று மாற்றப்பட்டதற்கு யார் காரணம்? இந்தப் பெயர் பலகை மாற்றத்திற்கான நிதி யாரால் கொடுக்கப்பட்டது என்பதையெல்லாம் ஆராய்ந்து சட்டத்திற்கு புறம்பாக பெயர் பலகை வைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் அங்கே மீண்டும் அம்மா மினி கிளினிக் என்ற பெயர் பலகை பொருத்தப்பட வேண்டும் என்பதுதான் அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. எனவே தமிழக முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு பெயர் பலகை மாற்றியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் மீண்டும் அம்மா மினி கிளினிக் என்ற பெயர் பலகை அங்கே பொருத்தப்படவும் ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அதில் ஓ. பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து