முக்கிய செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு

வியாழக்கிழமை, 2 டிசம்பர் 2021      தமிழகம்
cm-1-2021-12-02

தமிழகம் முழுவதும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின்  நவம்பர் மாதம் 7-ம் தேதி தொடங்கி இரவு, பகல் பாராமல் சென்னை மற்றும் ஏனைய மாவட்டங்களுக்கு நேரில் சென்று சீரமைப்புப் பணிகளைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். 

நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கனமழை  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும், மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளையும் பார்வையிட்டு, ஆய்வு செய்து, சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டு,  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.  

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பிரையண்ட் நகரில் கனமழையால் ஏற்பட்டுள்ள சேதங்களையும், சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரால் பாதிக்கப்பட்ட இடங்களையும்  முதல்வர் பார்வையிட்டு, ஆய்வு செய்து, வெள்ளநீரை அகற்றும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள, அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், பிரையண்ட் நகரில் தேங்கியிருந்த மழைநீரில் நீண்டதூரம் நடந்தே சென்று பாதிப்புகளை பார்வையிட்டு, அப்பகுதி மக்களிடம் பாதிப்புகளின் விவரங்கள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். 

தொடர்ந்து, அம்பேத்கர் நகர் மற்றும் ரஹ்மத் நகர் ஆகிய பகுதிகளில் முதல்வர் பார்வையிட்டு, ஆய்வு செய்து, வெள்ளநீரை அகற்றும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், அப்பகுதி மக்களிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். 

பின்னர், எட்டையபுரம் மதுரை சாலையில் உள்ள ஏ.வி.எம். மஹாலில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 3000 நபர்களுக்கு ரூ.42.60 லட்சம் மதிப்பிலான அரிசி, மளிகைப் பொருட்கள், பெட்ஷீட், பாய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை முதல்வர் நிவாரண உதவிகளாக வழங்கினார். 

முன்னதாக, தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர்  தலைமையில் வெள்ளப் பாதிப்புகள் குறித்தும்,  மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மழைக் காலங்களில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த சிறப்பு மருத்துவ முகாம்களை  தொடர்ந்து நடத்திடவும், மாவட்டத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றிட ஒருங்கிணைந்த திட்டத்தை தயாரிக்கவும், நீர்வழிப் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட உடனடி நடவடிக்கை எடுத்திடவும், பழுதடைந்த மின்கம்பங்களை சீர்செய்து, மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கிடவும், தரைப்பாலங்களை மறுசீரமைத்து, மேம்பாலங்களாக அமைத்திடவும், நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு தேவையான உணவு, குழந்தைகளுக்கு தேவையான பால் மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களை தங்குதடையில்லாமல் வழங்கிடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அலுவலர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.  

இந்த ஆய்வின்போது, அமைச்சர்கள் கே.என். நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், பி. கீதாஜீவன், அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் செ. சண்முகையா, ஜி.வி. மார்க்கண்டேயன், ஊர்வசி அமிர்தராஜ், தொழில் ஆணையர் மற்றும் இயக்குநர் சிஜி தாமஸ் வைத்யன், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் டாக்டர் கி. செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் டி. சாருஸ்ரீ மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து