முக்கிய செய்திகள்

மும்பை டெஸ்ட்டில் நியூசிலாந்து திணறல் : இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்

ஞாயிற்றுக்கிழமை, 5 டிசம்பர் 2021      விளையாட்டு
Indian-team 2021 12 05

Source: provided

மும்பை : 3-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இரண்டு தினங்களுக்கு முன் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய அணி தொடக்க அணி முதல் இன்னிங்சில் 325 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் துவக்க வீரர் மயங்க் அகர்வால் 150 ரன்கள் குவித்து அசத்தினார். 

நியூசிலாந்து அணியின் அஜாஸ் படேல் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் அள்ளி வரலாற்று சாதனை நிகழ்த்தினார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 62  ரன்களில் சுருண்டது.  அடுத்து நியூசிலாந்துக்கு ‘பாலோ-ஆன்’ வழங்காத இந்திய அணி 263 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள்  எடுத்து இருந்தது. 

3 ஆம் நாள்  ஆட்டம் துவங்கியதில் இருந்தே இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தது. முதல் இன்னிங்சில் 150 ரன்கள் குவித்த மயங்க் அகர்வால் 2-வது இன்னிங்சிலும் அரைசதம் (62 ரன்கள்) அடித்து அசத்தினார். இந்திய அணி 70 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் அடித்து இருந்த போது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.  

540- ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சை துவங்கியது.  இந்திய அணியின் துல்லியமான பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து  நியூசிலாந்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. துவக்க வீரர்கள் சோபிக்காத நிலையில், மூன்றாவது விக்கெட்டுக்கு களம் இறங்கிய டேரில் மிட்செல் 60 ரன்கள் சேர்த்து அக்சார் படேல் பந்தில் ஆட்டமிழந்தார். 

3-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள்  எடுத்துள்ளது. இன்னும் 2 நாட்கள் மீதமுள்ள நிலையில் நியூசிலாந்து அணிக்கு  கைவசம் 5 விக்கெட்டுகளே எஞ்சியிருப்பதால் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம் ஆகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து