முக்கிய செய்திகள்

பயங்கரவாதிகளுக்கு கருணை காட்டவே உ.பி.யில் ஆட்சியமைக்க விரும்புகின்றன: எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி பாய்ச்சல்

செவ்வாய்க்கிழமை, 7 டிசம்பர் 2021      இந்தியா
modi-2021-12-07

பயங்கரவாதிகளுக்கு கருணை காட்ட ‘சிவப்பு தொப்பிகள்’ ஆட்சியமைக்க விரும்புகின்ற என்று அகிலேஷ் யாதவ் மீதும் எதிர்க்கட்சிகள் மீதும் பிரதமர் மோடி கடுமையாக சாடியுள்ளார்.

403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பல்வேறு தரப்பினர் இடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்க உள்ளன. தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு கட்சிகளும் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளன. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜக பல்வேறு நலத்திட்டபணிகளை அறிவித்து வருகிறது.

இந்நிலையில், அம்மாநிலத்தின் கோரக்பூர் மாவட்டத்தில் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். அதன்படி, 8,603 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட உரத்தொழிற்சாலை, 1,011 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் இந்திய மருத்து ஆராய்ச்சி கவுன்சிலின் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றை பிரதமர் மோடி நேற்று திறந்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது பேசிய பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்தார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது, கோரக்பூரில் உரத்தொழிற்சாலை மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கியது சில செய்திகளை அனுப்பியுள்ளது. இரட்டை எஞ்சின் அரசு இருக்கும்போது வேலையும் இரட்டை வேகத்தில் நடைபெறும். நேர்மையான நோக்கத்துடன் வேலை செய்யும் போது, பேரிடர்கள் கூட தடையாக மாறாது. கோரக்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது என்பது நீண்டகால கோரிக்கை என அனைவருக்கும் தெரியும். ஆனால், 2017-க்கு முந்தைய அரசுகள் எய்ம்ஸ் அமக்க நிலம் ஒதுக்குவதில் காலதாமதம் செய்து வந்தன.

சிவப்பு தொப்பிகள் (சமாஜ்வாதி கட்சியின் அடையாளம்) அதிகாரத்திற்கு வரவேண்டும் என்ற ஒற்றை எண்ணத்தில் உள்ளனர் என்பது ஒட்டுமொத்த உத்தரபிரதேசத்திற்கும் தெரியும். உங்களின் வலி மற்றும் பிரச்சினைகளுக்கு அவர்கள் ஒன்றும் செய்வதில்லை. ஊழல், நில அபகரிப்பு, மாபியா கும்பலுக்கு விடுதலையளிக்க சிவப்பு தொப்பிகளுக்கு அதிகாரம் வேண்டும். 

பயங்கரவாதிகளுக்கு கருணை காட்டவும், அவர்களை சிறையில் இருந்து விடுதலை செய்யவும் ’சிவப்பு தொப்பிகள்’ ஆட்சியமைக்க விரும்புகின்றன. ஆகையால், எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் உத்தரபிரதேசத்தில் சிவப்பு தொப்பிகள் என்றால் சிவப்பு எச்சரிக்கை என்று அர்த்தம். அவர்கள் எப்போதும் எச்சரிகை மணிகள்’ என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து