முக்கிய செய்திகள்

மோசடி புகாரில் நிபந்தனை ஜாமீன்: சிறையில் இருந்து வெளியே வந்தார் ராஜேந்திர பாலாஜி

வியாழக்கிழமை, 13 ஜனவரி 2022      தமிழகம்
Rajendra-Balaji 2022 01 13

பண மோசடி புகாரில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நிபந்தனை ஜாமீன் கிடைத்ததையடுத்து நேற்று காலை திருச்சி சிறையிலிருந்து வெளியே வந்தார்.

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடி வரை மோசடி செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் பால்வளத் துறை முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளருமான ராஜேந்திரபாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, அவர் தலைமறைவானார். போலீஸ் தனிப்படைகள் கேரளம், பெங்களூரு, சென்னை, கோவை, திருச்சி, புதுச்சேரி, திருப்பதி உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு அவரைத் தேடி வந்த நிலையில், முன்ஜாமீன் கோரி அவர் உச்ச நீதிமன்றத்தில் முறையீட்டு முன்னாள் அமைச்சர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

சுமார் 20 நாட்கள் தேடுதலுக்குப் பிறகு, கடந்த ஜனவரி 5ம் தேதி கர்நாடக மாநிலம் ஹசன் பகுதியில் உள்ள காரில் சென்று கொண்டிருந்த ராஜேந்திரபாலாஜியை தனிப் படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். தொடர்ந்து, ராஜேந்திர பாலாஜியை தனிப் படையினர் விருதுநகர் அழைத்து வந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜனவரி 6ம் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், ராஜேந்திபாலாஜியின் மேல் முறையீட்டு மனுவை நேற்று முன்தினம் விசாரித்த உச்ச நீதிமன்றம், அவருக்கு 4 வார கால நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து, நேற்று காலை 7 மணியளவில் ராஜேந்திர பாலாஜி திருச்சி மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த ராஜேந்திர பாலாஜி திருச்சி மன்னார்புரம் பகுதியில் உள்ள தனியார் உணவு விடுதிக்குச் சென்றார்.

அங்கு மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 15க்கும் அதிகமான கார்களில் வந்திருந்த அவரது ஆதரவாளர்கள் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை சந்தித்தனர். பின்னர் ராஜேந்திர பாலாஜி விடுதியில் இருந்து கார் மூலம் விருதுநகர் புறப்பட்டு சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து