முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டாஸ்மாக் போன்று வருமானம் கிடைத்தால் வனத்துறை மீதும் அக்கறை செலுத்துவீர்களா? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

வியாழக்கிழமை, 30 ஜூன் 2022      தமிழகம்
chennai-court-2022 06 30

Source: provided

சென்னை: டாஸ்மாக் நிறுவனம் போல வருமானம் கிடைத்தால் வனத்துறை மீது அக்கறை செலுத்துவீர்களா? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வனப்பகுதியில் உள்ள அந்நிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சத்தியமங்கலம், முதுமலை உள்ளிட்ட வனப்பகுதிகளில் சுமார் 1,500 ஏக்கரில் அந்நிய மரங்கள் வளர்ந்துள்ளன என்று வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நிய மரங்கள் விவகாரத்தில் அறிக்கை தாக்கல் செய்வதைத் தவிர தமிழக அரசு வேறு என்ன செய்தது? அந்நிய மரங்களால் சரணாயலங்கள் அழிந்துவிடும் ஆபத்து உள்ளது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேலும், தமிழகத்தில் டாஸ்மாக் போல வருமானம் கிடைத்தால் வனத்துறை மீது அக்கறை செலுத்துவீர்களா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

முன்னதாக, தமிழக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சையது முசாமில் அப்பாஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நிலை அறிக்கையில், மாநிலத்தில் ஆனைமலை புலிகள் காப்பகம் (ஏடிஆர்), முதுமலை புலிகள் காப்பகம் (எம்டிஆர்), சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் (எஸ்டிஆர்) மற்றும் தருமபுரியில் 700 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கான முன்னோடி திட்டம் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்காக ரூ. 5.35 கோடி ஒதுக்க நிதித்துறை செயலர் ஒப்புதல் அளித்துள்ளார். முதல்கட்டமாக 200 ஹெக்டேர் பரப்பிலான சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படும்.

குறிப்பாக, சீமைக்கருவேல மரங்களை 10 ஆண்டுகளில் படிப்படியாக, முழுமையாக அகற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்த 5 ஆண்டுகளில் சீமைக்கருவேல மரங்கள் மீண்டும் வளராமல் கண்காணிக்கும் திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 196 வகை அந்நிய மரங்கள் பரவியுள்ளன. இதில் சீமைக்கருவேலம் உள்ளிட்ட 23 வகை மரங்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டியவை என முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!