முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்புச்செழியன், எஸ்.தாணு உள்ளிட்ட சினிமா தயாரிப்பாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை : கணக்கில் வராத பணத்தை பயன்படுத்தி சினிமா எடுக்கப்பட்டதா?

செவ்வாய்க்கிழமை, 2 ஆகஸ்ட் 2022      சினிமா
Film-producers 2022-08-02

Source: provided

சென்னை : கணக்கில் வராத பணத்தை பயன்படுத்தி சினிமா எடுக்கப்பட்டதாக வந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியன், தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல்ராஜா, சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் மற்றும் வேலூரைச் சேர்ந்த திரைப்பட விநியோகஸ்தர் சீனிவாசன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் அண்மையில் வெளியான சில திரைப்படங்களைத் தயாரிக்க கணக்கில் வராத பணத்தை பயன்படுத்தியதாக வந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், சென்னையில் உள்ள பிரபல திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று காலை 5 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர்.

ஃபைனான்சியர் அன்புச்செழியன்: 

கடந்த 2020-ம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த "பிகில்" படத் தயாரிப்பின்போது கணக்கில் வராத பணத்தை பயன்படுத்தியதாக பிரபல சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியனுக்குச் சொந்தமான இடங்களில் 4 நாட்கள் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.77 கோடி மற்றும் முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து நேற்று (ஆக.2) சென்னை மற்றும் மதுரையில் அன்புச்செழியனுக்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் காலை 5 மணி முதல் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

கலைப்புலி எஸ்.தாணு:

அன்புச்செழியனைத் தொடர்ந்து பிரபல திரைப்படத் தயாரிப்பாளரான எஸ்.தாணுவுக்குச் சொந்தமான இடங்களிலும், வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். தி.நகர் பிரகாசம் சாலையில் உள்ள தாணுவின் அலுவலகத்திற்கு இரண்டு வாகனங்களில் வந்த 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

பிரபு - ஞானவேல் ராஜா: 

மேலும் சென்னை தி.நகர் தணிகாசலம் சாலையில் திரைப்படத் தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு மற்றும் ஞானவேல்ராஜாவுக்கு சொந்தமான ஸ்டுடியோ கிரீன் அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

சத்யஜோதி பிலிம்ஸ்: 

இதே போல், சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

வேலூரில் சோதனை: 

வேலூர் எஸ் பிலிம் உரிமையாளரான சீனிவாசன் என்பவரது அலுவலகத்திலும் வருமான வரி சோதனை நடைபெற்றது. வேலூர் அண்ணாசாலையில் உள்ள சீனிவாசனின் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சீனிவாசன், வட ஆற்காடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார்.

தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான திரைப்படத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தலர்கள் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், மேலும் சில தயாரிப்பாளர்கள், திரைப்பட விநியோகஸ்தலர்கள் அலுவலகங்களிலும் இந்த சோதனை நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து