முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் இன்று முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ. 4 உயர்கிறது

வியாழக்கிழமை, 11 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Milk-2022 08 11

தமிழகத்தில் தினமும் சுமார் 2.25 கோடி லிட்டர் பால் உற்பத்தி நடைபெறுகிறது. இதில் அரசின் ஆவின் நிறுவனம் சுமார் 38.26 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்கிறது. மீதம் உள்ள பாலை தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றன. ஆவின் நிறுவனம் தினமும் 16.41 லட்சம் லிட்டர் பாலை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்கிறது. தனியார் நிறுவனங்கள் 1.25 கோடி லிட்டர் பால்பாக்கெட்டுகளை விற்பனை செய்கின்றன. 

தமிழகத்தில் தினசரி பால் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஆவின் வெறும் 16 சதவீதம் மட்டுமே பங்களிப்பதாலும், மீதமுள்ளவற்றில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு 84 சதவீதம் என்கிற நிலையில் இருப்பதாலும் பொதுமக்களும், உணவகங்கள், தேநீர் கடைகள் உள்ளிட்ட வணிகம் சார்ந்த நிறுவனங்களும் தனியார் பாலினையே சார்ந்திருப்பதால் அந்நிறுவனங்கள் தன்னிச்சையாக அடிக்கடி பால் விற்பனை விலையை உயர்த்துவதையும், கொள்முதல் விலையை குறைப்பதையும், வாடிக்கையாக கொண்டிருக்கின்றன. 

2020-ம் ஆண்டு கொரோனா தொற்று ஊரடங்கை அமல்படுத்துவதற்கு முன்பு தனியார் பால் விற்பனை விலை லிட்டருக்கு ரூ. 6 வரை உயர்த்தப்பட்டது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது விற்பனை சரிந்து விட்டதாக கூறி அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 18 வரை குறைத்தது. ஆனால் விற்பனை விலையை ஒரு ரூபாயை கூட குறைக்கவில்லை. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி, பிப்ரவரி மாதம் ஒரு முறையும், ஏப்ரல், மே மாதம் ஒருமுறையும் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு தலா ரூ. 4 வீதம் உயர்த்தியது. 

இந்த நிலையில் 3-வது முறையாக தனியார் பால் விற்பனை விலை உயர்த்தப்படுகிறது. சீனிவாசா பால் நிறுவனம் நேற்று முதல் லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தியுள்ளது. ஹட்சன் நிறுவனம் இன்று (12-ம் தேதி) முதல் பால், மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ரூ. 4 உயர்த்துவதாக அறிவித்துள்ளது. மற்ற நிறுவனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக விலையை உயர்த்தப்போவதாக கூறப்படுகிறது. 

 தனியார் நிறுவனங்களின் இந்த தன்னிச்சையான விலை உயர்வு அறிவிப்பை தமிழக அரசு தலையிட்டு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச்சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து