முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யோகி ஆதித்யநாத்துக்கு இடமில்லை: பா.ஜ.க. பாராளுமன்ற குழுவிலிருந்து நிதின் கட்கரி, சிவ்ராஜ் சிங் விடுவிப்பு

புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2022      அரசியல்
Nitin-Shivraj 2022-08-17

பா.ஜ.க.வில் மிகப்பெரிய அளவிலான அமைப்பு ரீதியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி நிதின் கட்கரி, சிவ்ராஜ் சிங் ஆகியோர் பாராளுமன்றக் குழுவில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இக்குழுவில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட யோகி ஆதித்யநாத் இடம் பெறவில்லை.

கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா, மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி இக்பால் சிங் லால்புரா, மக்களவை எம்.பி. சத்யநாராயணன் ஜட்டியா, பா.ஜ.க. தேசிய ஓபிசி மோர்சா தலைவர் கே.லட்சுமணன், தேசியச் செயலர் சுதா யாதவ் ஆகியோர் புதிதாக பாராளுமன்ற குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் இந்த பாராளுமன்றக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர். இந்த மாறுதலை சமூக ரீதியாகாவும் பிராந்திய ரீதியாகவும் அதிக பிரதிநிதித்துவம் உடையதாக மாற்றவே இந்தப் புதிய நியமனங்களை மேற்கொண்டுள்ளதாக கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது. புதிதாக கட்சியில் சேர்க்கப்பட்டவர்களில் லால்புரா சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர். இவர்தான் இச்சமூகத்தில் இருந்து பா.ஜ.க. பாராளுமன்றக் குழுவில் நியமிக்கப்பட்ட முதல் நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், பா.ஜ.க. தேசிய பொதுச் செயகர் பூபேந்திர யாதவ், ஓம் மாதுர் மற்றும் பா.ஜ.க. மகளிர் அணித் தலைவர் வானதி ஸ்ரீநிவாசன் ஆகியோர் மத்திய தேர்தல் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர் ஷானவாஸ் ஹுசைன், ஜூவல் ஓரன் ஆகியோர் இந்தக் குழுவில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் நடந்த உத்தரப் பிரதேச தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு வித்திட்ட பெருமை யோகி ஆதித்யநாத்துக்கும் உண்டு. இந்நிலையில், பா.ஜ.க. பாராளுமன்றக் குழுவில் யோகி ஆதித்யநாத் முக்கியப் பதவி வழங்கி அலங்கரிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யோகி ஆதித்யநாத்துக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. பா.ஜ.க.வின் பாராளுமன்றக் குழுவில் மீண்டும் இடம்பெற்றுள்ள மூவர் பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் ஜெ.பி.நட்டா மட்டுமே.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து