முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தை செல்போன் உற்பத்தி மையமாக மாற்றும் நோக்கில் செயல்பட்டு வருகிறோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

வெள்ளிக்கிழமை, 30 செப்டம்பர் 2022      தமிழகம்
CM-1 2022--09-30

Source: provided

செங்கல்பட்டு : தற்போது சீனாவில்தான் புதிய செல்போன் மாடல்கள் பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன. அதனை மாற்றி தமிழகத்தையும் அத்தகைய உற்பத்தி மையமாக மாற்றிட வேண்டும் என்ற நோக்கோடு நாங்கள் செயல்பட்டு வருகிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

செங்கல்பட்டில் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் பெகாட்ரானின் நவீன ஆலை திறப்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கலந்து கொண்டு பேசியதாவது, 

தைவானை சேர்ந்த நிறுவனம் தமிழகத்தில் தொழிற்சாலையை திறந்துள்ளது. அந்நாட்டை சேர்ந்த பல நிறுவனங்கள், தமிழகத்தில் மேலும் பல தொழிற்சாலைகளை துவங்க வேண்டும். புதிய தொழில் நிறுவனங்கள் உருவாக்குவதை ஊக்கப்படுத்தி வருகிறோம். ஸ்ரீபெரும்புதூர், ஓசூர் மற்றும் கோவை என்று மின்னணு உற்பத்தி மையங்கள் பெருகி வருகின்றன.  பெண்கள் பணிபுரிவதற்கு ஏதுவான சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிறது. அதிகமான பெண்கள் வேலைக்கு செல்லும் மாநிலம் தமிழகம். இதற்காக அரசு பஸ்களில் இலவசமாக பயணம் மேற்கொள்ளும் திட்டத்தை கடமையாக செய்து வருகிறோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரிக்கப்படுகிறது. பெக்ட்ரான் மூலம் பெண்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் பெரிதும் விரும்பும் மாநிலமாக தமிழகம். உற்பத்தியில், வர்த்தகத்தில், தொழிலில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. இந்திய அளவில் வணிகம் செய்வதில் எளிதான மாநிலம் என்ற பட்டியலில் தமிழகம் இடம்பெற்றுள்ளது.  மின்னணுவியல் துறையை வளர்ந்து வரும் துறையாக தமிழக அரசு வகைப்படுத்தி உள்ளது. அந்த துறையில் ஏராளமான உற்பத்தி திட்டங்களை தமிழக அரசு ஈர்த்துள்ளது. 2030க்குள் தமிழக பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்த வேண்டும் என்பது எங்களது லட்சியம். உயர் தொழில்நுட்பத் திட்டங்களையும், பெருமளவில் வேலைவாய்ப்பினை அளிக்கும் திட்டங்களையும் கொண்டு வர தமிழக அரசு பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது. ஒவ்வொரு துறையிலும், மதிப்புக்கூட்டு உற்பத்தியை மேற்கொள்ளும் திட்டங்களையும் பன்முகப்படுத்தும் முயற்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம். இதுபோன்ற முயற்சியால்தான், அண்மையில் தமிழகத்தில் செமி கண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது சீனாவில்தான் புதிய செல்போன் மாடல்கள் பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன. அதனை மாற்றி தமிழகத்தையும் அத்தகைய உற்பத்தி மையமாக மாற்றிட வேண்டும் என்ற நோக்கோடு நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.  ஸ்மார்ட்போன்கள் உற்பத்திக்கான முழு விநியோக சங்கிலியையும் தமிழகத்திற்கு கொண்டு வரும் முயற்சிகளிலும் நாங்கள் மேற்கொண்டுள்ளோம். இத்தகைய நேரத்தில் பெகாட்ரான் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி திட்டம் இங்கு தொடங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. அதே நேரம் உங்களுடைய இரண்டாவது கட்ட உற்பத்தித் திட்டத்தையும் விரைவில் நீங்கள் இங்குதான் தொடங்க வேண்டும். அரசுத் தரப்பில் அதற்காக நாங்கள் அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக இருக்கிறோம். மேலும் உங்கள் விரிவாக்கத் திட்டத்தையும், மின் உற்பத்தி திட்டங்களையும் தமிழகத்திலேயே தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து