முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மியான்மரில் மோசடி கும்பலிடம் சிக்கித் தவித்த தமிழர்கள் 13 பேர் தாயகம் திரும்பினர்

புதன்கிழமை, 5 அக்டோபர் 2022      தமிழகம்
Senji-Mastan 2022-10-05

Source: provided

சென்னை : மியான்மரில் மோசடி கும்பலிடம் சிக்கித் தவித்த தமிழர்கள் 13 பேர் நேற்று பத்திரமாக தாயகம் திரும்பினர். எஞ்சிய 6 பேரையும் மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், சட்டவிரோதமாக அழைத்து சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். 

தகவல்தொழில்நுட்ப பணிகளுக்காக தாய்லாந்திற்கு சென்ற 50 தமிழர்கள் மியான்மரில் ஆன்லைன் மோசடி கும்பலிடம் சிக்கித் தவித்தனர். தங்களை சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டினர். 50 தமிழர்கள் உள்பட 300 பேர் மியான்மரில் சிக்கித் தவித்தனர். மியான்மரில் சிக்கித் தவிக்கும் தங்களை மீட்க கோரி, அவர்கள் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. மியான்மரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சியினரும்

மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், மியான்மரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து மியான்மரில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுத்தது.

இதன்பயனாக, மியான்மரில் சிக்கித் தவித்த 14 பேர், தாய்லாந்தில் இருந்து நேற்று அதிகாலை விமானம் மூலம் சென்னை திரும்பினர். இவர்களில் 13 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். சென்னை விமான நிலையம் வந்திறங்கிய அவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சென்று வரவேற்றார். 

பின்னர் அமைச்சர் செஞ்சி மஸ்தான் நிருபர்களிடம் கூறியதாவது.,  தமிழக அரசின் முயற்சியால் மியான்மரில் சிக்கி இருந்த தமிழர்களில் 13 பேர் முதற்கட்டமாக பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் தாய்லாந்தில் இருந்து தமிழ்நாடு வருவதற்கான விமான டிக்கெட் உள்ளிட்ட முழு பயண செலவையும் தமிழக அரசை ஏற்று வழங்கி இருந்தது. முதல்-அமைச்சரின் வழிகாட்டு தலின்படி வெளிநாட்டில் இருந்து வந்துள்ள இவர்களுக்கு வேலை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்.

மியான்மர் நாட்டுக்கு சட்டவிரோதமாக இந்த இளைஞர்களை அழைத்துச் சென்ற ஏஜெண்டுகள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் இருந்து வந்துள்ள இந்த இளைஞர்களிடமிருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் அந்த ஏஜென்ட்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாடுகளுக்கு வேலைகளுக்காக செல்லும் தமிழர்கள் அரசின் இணைய தளத்தில் தங்களது பயணத் திட்டத்தையும் தங்களது வேலை குறித்த விவரத்தையும் பதிவு செய்து வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும். இன்னும் 6 தமிழர்கள் மியான்மரில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டு நாடு திரும்பிய 13 பேரில் ஒருவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "துபாயில் வேலைக்கு விண்ணப்பித்திருந்தோம். துபாய் ஏஜென்ட் தாய்லாந்தில் வேலை இருக்கிறது என்றுகூறி அழைத்துச் சென்றார். ஆனால், நாங்கள் அங்கு சென்றபிறகு வேலை இல்லை என்று தெரிவித்ததோடு, 450 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு இடத்திற்கு எங்களை அழைத்துச் சென்றனர். 

அவர்கள் எங்கள் தொலைபேசிகளை எடுத்துச் சென்றனர். இதன்பின்னரே நாங்கள் மியான்மரில் இருப்பது தெரியவந்தது. இதற்கிடையே உள்ளூர் ராணுவம் எங்களை காப்பாற்றியது. எனினும், அதற்கு முன்னதாக, நாங்கள் மனரீதியாக சித்திரவதை செய்யப்பட்டோம்; ஒரு நாளைக்கு 15-16 மணி நேரம் வேலை செய்ய பணிக்கப்பட்டோம்" என்று அங்கு நடந்த சித்திரவதைகளை உருக்கமாக வெளிப்படுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து