முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காதலியைத் திருமணம் செய்த கிரிக்கெட் வீரர் அக்‌ஷர் படேல்

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2023      விளையாட்டு
Akshar-Meha 2023 01 27

Source: provided

பிரபல கிரிக்கெட் வீரர் அக்‌ஷர் படேலுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. 29 வயது அக்‌ஷர் படேல் இந்திய அணிக்காக 8 டெஸ்டுகள், 49 ஒருநாள், 40 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.  இந்நிலையில், அக்‌ஷர் படேல், தனது காதலி மேஹா படேலை வதோதராவில் வியாழக்கிழமை திருமணம் செய்தார். மேஹா, ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார். 

அக்‌ஷர் படேலின் திருமணத்தில் கலந்துகொண்ட பிரபல கிரிக்கெட் வீரர் ஜெயதேவ் உனாட்கட், இன்ஸ்டகிராமில் மணமக்களின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். மேலும் சமூகவலைத்தளங்களில் அக்‌ஷர் படேல் திருமணப் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன.

________________

டோனியின் இடத்தை கண்டிப்பாக நிரப்புவேன்: இஷான் நம்பிக்கை

நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி களமிறங்குகிறது. இத்தொடரில் ஹர்திக் பாண்டியா தலமையில் இந்தியா களமிறங்குகிறது. இத்தொடரின் முதல் போட்டி நேற்று ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றது. இந்திய அணியில் ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து இஷான் கிஷன் மட்டும் விளையாடுகிறார். இந்நிலையில் டோனி குறித்து அவர் பேசியதாவது:- நான் முதலில் 23 நம்பரை என்னுடைய ஜெர்சியில் கேட்டேன். ஆனால் அது ஏற்கனவே குல்தீப் யாதவ் பயன்படுத்தி விட்டதால் வேறு நம்பரை கேட்குமாறு என்னிடம் கூறினார்கள். 

அப்போது எனது அம்மாவிடம் போன் செய்து உங்களுக்கு பிடித்த நம்பரை சொல்லுங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன 32 நம்பரை மறு வார்த்தை பேசாமல் எனது ஜெர்சியில் பயன்படுத்தி வருகிறேன். நான் எதற்காகவும் பயப்பட மாட்டேன். எனது வழியில் வரும் அனைத்து சவாலுக்கும் நான் தயாராக இருக்கிறேன்.நான் வளரும் போது என்னுடைய ரோல் மாடல் எம்எஸ் டோனி ஆவார். ஏனெனில் அவர் எங்கள் ஊரிலிருந்து எங்களது ஜார்க்கண்ட் அணிக்காக விளையாடியுள்ளார். எனவே இந்திய அணியில் அவரது இடத்தை நான் நிரப்ப விரும்புகிறேன். என்று அவர் கூறினார்.

________________

தேர்வுக்குழு, டிராவிட்டுக்கு சவுரவ் கங்குலி யோசனை

எதிர்வரும் ஒருநாள் உலகக் கோப்பை வரையில் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களும், பயிற்சியாளர் ராகுல் திராவிடும் செய்ய வேண்டியது குறித்து தனது ஆலோசனையை இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான கங்குலி பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்.,  “இந்திய அணி மிகவும் பலம் வாய்ந்த அணி. நம் நாட்டில் தொழில்முறை ரீதியாக கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் அதிகம். இதில் பெரும்பாலானவர்களுக்கு தேசிய அணியில் வாய்ப்பு கிடைப்பதில்லை. காரணம் அதற்கான போட்டி மிகவும் அதிகமாக உள்ளதுதான்.

தற்போதைய அணி உலகக் கோப்பை வரை விளையாட வேண்டும் என நான் விரும்புகிறேன். தேர்வாளர்கள் மற்றும் பயிற்சியாளர் ராகுல் திராவிட் இதை செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம். அவர்கள் இந்த அணியை ஒருங்கே வைத்திருக்க வேண்டும். உலகக் கோப்பை தொடர் குறித்து வீரர்கள் கவலை கொள்ள வேண்டாம். சிறப்பான ஆட்டத்தை விளையாடினால் போதும்” என கங்குலி சொல்லியுள்ளார்.

________________

நியூசி.,க்கு எதிரான தொடர்: ருதுராஜ் கெய்க்வாட் விலகல்

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி ராஞ்சியில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த தொடருக்காக இந்திய அணி சேர்க்கப்பட்டுள்ள இளம் ஓபனிங் பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகி உள்ளார்.

இந்த தொடருக்கு முன்னதாக மகராஷ்டிரா - ஹைதராபாத் அணிகள் மோதிய ராஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்ற அவர் 8, 0 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்தப் போட்டிக்கு பின்னர் அவருக்கு மணிக்கட்டில் காயம் ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார். காயம் காரணமாக ஏற்கனவே கடந்த ஆண்டில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் விளையாட முடியாமல் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.

________________

எம்.எஸ். டோனி தயாரிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து 'டோனி என்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே, 'தி ரோர் ஆஃப் தி லயன்' என்ற ஆவணப்படத்தைத் தயாரித்திருக்கும் இந்நிறுவனம் தமிழில் திரைப்படம் ஒன்றை தயாரிக்கின்றனர். சாக்ஷி சிங் டோனியின் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு, குடும்ப பொழுதுபோக்கு படமாக தயாராகும் இப்படம் விரைவில் தொடங்குகிறது. காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகவுள்ள இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்.

 டோனியின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ள முதல் படத்தின் அப்டேட் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டிலை, மோஷன் போஸ்டர் வீடியோவாக படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் நடிகை நதியா, ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் இப்படத்திற்கு லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married) என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோஷன் போஸ்டர் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து