முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா 29-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்

செவ்வாய்க்கிழமை, 14 மார்ச் 2023      ஆன்மிகம்
Thayamangalam 2023 03 14

Source: provided

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா வரும் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

இளையான்குடி அருகே உள்ளது தாயமங்கலம். இங்கு இந்து சமய அறநிலையத்திற்கு உட்பட்ட முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான திருவிழா வருகிற 29-ம் தேதி காப்புக்கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

முன்னதாக அன்று காலை 10.25 மணிக்கு நவசக்தி ஹோமத்துடன் விழா தொடங்கி மாலை லட்சார்ச்சனை விழாவும், இரவு 10 மணிக்கு ஸ்ரீவிக்னேஷ்வரர் பூஜை, துவஜாரோகனம் மற்றும் கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. 

விழாவையொட்டி தினந்தோறும் இரவு சிம்ம வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம், அன்ன வாகனம், பூதவாகனம் ஆகிய வாகனங்களில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சியளிக்கிறார். 

விழாவின் சிகர நிகழ்ச்சியாக அடுத்த மாதம் 5-ம் தேதி பொங்கல் வைபவம் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் போது பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து கோவிலை சுற்றி ஆங்காங்கே பொங்கல் வைத்தும், ஆடு, கோழிகளை பலியிட்டும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவர். 

மறுநாள் 6-ம் தேதி இரவு 7.15 மணிக்கு மின்சார தீப அலங்காரத்துடன் தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. 7-ம் தேதி காலையில் பக்தர்கள் பால்குடம் மற்றும் அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும், மாலையில் ஊஞ்சல் உற்சவமும், இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது. 

8-ம் தேதி காலை தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் செட்டியார் செய்து வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து