முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1,000 கோடி ரூபாய் மதிப்பிலான வட சென்னை வளர்ச்சி திட்டம்: அடுத்த மூன்று ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்

திங்கட்கிழமை, 20 மார்ச் 2023      தமிழகம்
Budget-11 2023 03 20

சென்னையில் சீரான, சமமான வளர்ச்சியை உறுதி செய்ய “வட சென்னை வளர்ச்சி திட்டம்” என்ற திட்டத்தை 1,000 கோடி ரூபாய் செலவில் அடுத்த மூன்று ஆண்டுகளில் அரசு செயல்படுத்தும். இத்திட்டத்தில், கட்டமைப்பு பற்றாக்குறைகளையும் வளர்ச்சிக் குறியீடுகளின் குறைபாடுகளையும் கண்டறிந்து, அவற்றைக் களைய நடவடிக்கை எடுக்கப்படும்” தமிழக பட்ஜெட் 2023-ல் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை தொடர்பான திட்டங்களையும், அதற்கான நிதி ஓதுக்கீட்டு விவரங்களையும் நேற்று பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் அறிவித்தார். அதன் விவரம் வருமாறு., அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ், குடிநீர் வழங்கலை சீரமைத்தல், கழிவுநீர் கட்டமைப்பை மேம்படுத்துதல், நீர்நிலைகளை புதுப்பித்தல், பசுமையான நகர்ப்புரங்களை உருவாக்குதல் போன்ற திட்டங்களை அரசு மேற்கொண்டு வருகிறது. இதுவரை, இத்திட்டத்தின் கீழ், 9,378 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது, அவற்றில் 5,960 கோடி ரூபாய் மாநில அரசாலும் உள்ளாட்சி அமைப்புகளாலும் செலவிடப்படும். இந்த திட்டத்திற்காக, வரவு-செலவுத் திட்டத்தில் 612 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மக்களுக்குக் குடிநீர் வசதிகளை மேம்படுத்துவதற்காக, உயிர் நீர் (ஜல் ஜீவன்) இயக்கத்தின் கீழ், 103 கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்கு, 15,734 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அவற்றில் 54 சதவீத செலவினத்தை மாநில அரசு ஏற்கும். மேலும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் 7,145 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்த பன்னாட்டு நிறுவனங்களில் நிதியுதவிக்காக முன்மொழியப்படும். வரும் நிதியாண்டில் உயிர் நீர் இயக்கத்தைச் செயல்படுத்த 6,600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு, உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் போது, கோவையில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும் என்று முன்னாள் முதல்வர் கலைஞர் அறிவித்தார்கள். கிடப்பில் போடப்பட்ட இத்திட்டத்தை மீட்டெடுத்து, கோவையில் உலகத் தரம் வாய்ந்த ‘செம்மொழிப்பூங்கா’ இரண்டு கட்டங்களாக அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இதன் முதற்கட்டமாக, 45 ஏக்கர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா அமைக்கவும் இதர வசதிகளை மேம்படுத்துவதற்கும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மொத்தம் 172 கோடி ரூபாய் செலவில் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதற்காக, வரவு-செலவுத் திட்டத்தில் 43 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிங்காரச் சென்னையை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, அடையாறு, கூவம் உள்ளிட்ட நீர்வழிகளை சுத்தப்படுத்தி, மறுசீரமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முயற்சிகளின் முதற்கட்டமாக, 44 கி.மீ. நீளமுள்ள அடையாறு ஆற்றில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தில் கழிவுநீர் ஆற்றில் கலப்பதைத் தடுத்தல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (STPs) அமைத்தல் போன்ற ஆற்றைத் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், எழில் கொஞ்சும் பூங்காக்கள், பசுமை நடைபாதைகள், திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடங்கள், தரமான அருந்தகங்கள் போன்ற கண்கவர் பொழுதுபோக்கு அம்சங்கள் அடையாறு ஆற்றங்கரையை அலங்கரிக்கும். இத்திட்டம் அரசு-தனியார் பங்களிப்புடன் ஏறத்தாழ 1,500 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.

நகர்ப்புற உள்ளாட்சிகளைத் தரம் உயர்த்தியதன் காரணமாக, அருகிலிருக்கும் புறநகர்ப் பகுதிகளும் அவற்றோடு இணைக்கப்பட்டுள்ளன. அவற்றிலுள்ள மண்சாலைகளைத் தரம் உயர்த்துவது அவசியமாகும். இப்பகுதிகளில், 4,540 கி.மீ. நீளமுள்ள மண் சாலைகளில், 1,633 கி.மீ. மண் சாலைகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்கெனவே உள்ளாட்சி அமைப்புகளால் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. வரும் ஆண்டில், 1,424 கி.மீ. மண் சாலைகள், மொத்தம் 1,211 கோடி ரூபாய் செலவில் தரமான சாலைகளாக மேம்படுத்தப்படும்.

நகர்ப்புற உள்ளாட்சிகளில் பொதுக் கழிப்பறைகளின் செயல்பாட்டையும் பராமரிப்பையும் மேம்படுத்த அரசு முயற்சிகளை எடுத்து வருகின்றது. பெருநகர சென்னை மாநகராட்சியில் புதிய பொதுக் கழிப்பறைகள், சமுதாயக் கழிப்பறைகள் கட்டுதல், இயங்கி வரும் கழிப்பறைகளைச் சீரமைத்தல், அவற்றின் பராமரிப்பு ஆகிய பணிகள் 430 கோடி ரூபாய் செலவில் அரசு - தனியார் பங்களிப்பு மூலம் ஒரு முன்னோடித் திட்டமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் வெற்றியின் அடிப்படையில், மாநிலத்தில் உள்ள பிற மாநகராட்சிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

நாட்டிலேயே வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான, சென்னை, பல்வேறு நிறுவனங்களால் வெளியிடப்பட்ட ‘வாழ உகந்த நகரங்கள் பட்டியலில்’ முன்வரிசையில் உள்ளது. இருப்பினும், நகரத்தின் சில பகுதிகளில், குறிப்பாக வடசென்னையில், போதிய அளவில் அடிப்படை வசதிகளும் கட்டமைப்புகளும் இல்லா நிலை உள்ளது. சென்னையில் சீரான, சமமான வளர்ச்சியை உறுதி செய்ய “வட சென்னை வளர்ச்சி திட்டம்” என்ற திட்டத்தை 1,000 கோடி ரூபாய் செலவில் அடுத்த மூன்று ஆண்டுகளில் அரசு செயல்படுத்தும். இத்திட்டத்தில், கட்டமைப்பு பற்றாக்குறைகளையும் வளர்ச்சிக் குறியீடுகளின் குறைபாடுகளையும் கண்டறிந்து, அவற்றைக் களைய நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டம் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நிதியையும் நடைமுறையிலுள்ள திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து