முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை அமல்படுத்த வேண்டும்: கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

வியாழக்கிழமை, 21 செப்டம்பர் 2023      இந்தியா
Supreme-Court 2023-04-06

புது டெல்லி, காவிரி நதிநீர் பங்கீட்டில் கர்நாடக அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே பிரச்சினை நீடித்து வருகிறது. இந்த நிலையில், நடப்பாண்டு ஆகஸ்டு மாதத்துக்கான நதிநீர் பங்கை கர்நாடகம் வழங்க மறுப்பதாக கூறி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் ஆகஸ்டு 14-ம் தேதி மனுதாக்கல் செய்யப்பட்டது. 

இந்த வழக்கை கடந்த ஆகஸ்டு 25-ம் தேதி விசாரித்த சுப்ரீம்கோர்ட் காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை அளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தது. அதன்பிறகு வழக்கு செப்டம்பர் 1-ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டதால் தமிழக அரசின் தரப்பில் சுப்ரீம்கோர்ட்டில் முறையிடப்பட்டது. 

அப்போது, நீதிபதிகள் அமர்வு, இந்த விவகாரம் செப்டம்பர் 6-ம் தேதி விசாரிக்கப்படும் என கூறி இருந்தனர். இந்த நிலையில் செப்டம்பர் 6-ம் தேதி சுப்ரீம்கோர்ட்டில் விசாரிக்கப்படும் வழக்குகள் பட்டியலில் இந்த விவகாரம் இடம் பெற்றிருந்தது. 

ஆனால், அந்த அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி பி.எஸ். நரசிம்மா விடுமுறையில் இருந்ததால், அந்த வழக்கு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வு முன் இந்த விவகாரத்தை தமிழகத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் குறிப்பிட்டு உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். 

அப்போது, நீதிபதி பி.ஆர்.கவாய் செப்டம்பர் 21-ம் தேதி இந்த விவகாரம் விசாரணைக்குப் பட்டியலிடப்படும் என்று கூறி இருந்தார். அதன்படி இந்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இருந்தது. 

அதன்படி நீதிபதிகள் பி.ஆர். கவாய், பி.எஸ். நரசிம்மா, பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை நேற்று  விசாரித்தது. தமிழக அரசு சார்பில் வக்கீல்கள் முகுல் ரோத்தகி, வில்சன், உமாபதி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். 

அப்போது அவர்கள், ஆகஸ்டு மாதம் முதல் தண்ணீர் திறப்பதில் கர்நாடகா பிரச்சினை செய்து வருகிறது. காவிரி ஆணையத்தின் உத்தரவை கர்நாடகம் செயல்படுத்துவதில்லை. தற்போதைய சூழலில் கர்நாடகா அணைகளில் இருக்கும் நீரின் அளவைப் பொறுத்து பார்த்தாலும், தமிழகத்துக்கு 6400 கன அடி தண்ணீரை திறந்து விட வாய்ப்பு உள்ளது என காவிரி மேலாண்மை ஆணையம் முதலில் கூறியது. 

இருப்பினும் 5 ஆயிரம் கன அடி நீரை தமிழகத்துக்கு திறந்து விட்டால் போதும் என கர்நாடகாவுக்கு உத்தரவிட்டனர். ஆனால் கர்நாடகம் அந்த உத்தரவையும் கூட பின்பற்றுவதில்லை. ஒவ்வொரு முறையும் ஒரு உத்தரவை ஆணையம் பிறப்பிக்கும் போதும் ஏதாவது ஒரு காரணத்தை கூறி தமிழகத்துக்கான நீரை கொடுக்க கர்நாடகம் மறுத்து வருகிறது. 

மேலும், காவிரி ஒழுங்காற்று குழுதான் தண்ணீரின் அளவு உள்ளிட்ட புள்ளி விவரங்களை கவனத்தில் கொண்டு தண்ணீர் திறப்பதற்கான அளவை நிர்ணயம் செய்கிறது. அவர்கள் தமிழ்நாட்டுக்கு தேவையான தண்ணீரை திறந்து விட போதுமான பரிந்துரைகளை பல்வேறு கட்டங்களாக கொடுத்த போதும் காவிரி மேலாண்மை ஆணையம் அந்த அளவில் இருந்து எப்போதும் குறைத்து தண்ணீரை திறக்க உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள். 

ஒவ்வொரு முறையும் 15 ஆயிரம் கன அடி, 10 ஆயிரம் கன அடி, 7200 கன அடி, 5 ஆயிரம் கன அடி, என தொடர்ச்சியாக தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு கொண்டே வந்துள்ளது. எங்களுக்கு தர வேண்டிய தண்ணீர் அளவு அதிக அளவில் நிலுவையில் உள்ளது. 

ஆனால் அதை எல்லாம் நாங்கள் கேட்கவில்லை. தற்போதைக்கு திறந்து விட வேண்டிய தண்ணீரை மட்டுமாவது திறந்து விட வேண்டும் என்றுதான் கேட்கிறோம். மழை பற்றாக்குறை இருக்கிறது என்பதை நாங்களும் ஒத்துக் கொள்கிறோம். 

ஆனால் அதற்காக அவர்களிடம் இருக்கும் நீரை கூட பகிர்ந்து கொடுக்க மாட்டேன் என்றால் எப்படி? நாங்கள் கடைமடை மாநிலமாக இருக்கிறோம். அவர்களுக்கு அவ்வளவு பிரச்சினை என்றால் எங்களுக்கு எவ்வளவு இருக்கும்? 

வறட்சியின் பாதிப்பு என்பது அவர்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும்தான். கடந்த 12-ம் தேதி கூட்டத்தின் போது, 56 சதவீதம் நீர் பற்றாக்குறை என கூறினார்கள். ஆனால் 6400 கன அடி திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு குறிப்பிட்டுள்ளது. ஆனால் 5000 கன அடி என இறுதி உத்தரவில் கூறப்பட்டுள்ளது. புள்ளி விவரத்தை கணக்கிட்டு அதனடிப்படையில் நீர் வழங்க உத்தரவிடப்பட்டும் அதனை கர்நாடகம் செயல்படுத்த மறுக்கிறது என்று வாதிட்டனர். 

அப்போது கர்நாடகா அரசு வக்கீல் கர்நாடகாவில் மழை இல்லை, காவிரியில் நீரும் குறைவாக இருக்கிறது. தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் விவசாயத்துக்கு மட்டும்தான். ஆனால் கர்நாடகாவை பொறுத்த வரை குடிநீர், விவசாயம் என அனைத்துக்கு நீர் தேவை. அதுதான் எங்களது பிரச்சினை. எங்களால் வினாடிக்கு 2500 கன அடி மட்டுமே தண்ணீர் திறக்க முடியும் என்று வாதிட்டார். 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு உத்தரவுகளுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்க மறுப்பு தெரிவித்தனர். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவில் தலையிட முடியாது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் 15 நாட்களுக்கு ஒரு முறை கூடி சூழலை ஆராய்ந்து வருகிறது. 

மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு உத்தரவுகள் மற்றும் பரிந்துரைகளை கர்நாடக அரசு அமல்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதே வேளையில் காவிரியில் 24 ஆயிரம் கன அடி நீரை திறக்க கோரும் தமிழ் நாடு அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு உள்ளது. வறட்சி கால அட்டவணைப்படி தமிழ்நாட்டுக்கான உரிய நீரை கர்நாடகா திறக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 3 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 2 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து