முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில் விபத்தை தடுத்த தென்காசி தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 27 பெப்ரவரி 2024      தமிழகம்
Stalin 2021 11 29

Source: provided

சென்னை : ரயில்  விபத்தை தடுத்த தென்காசி மாவட்டத்தை சேர்ந்த தம்பதிக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், புளியரை கிராமம், எஸ்-வளைவு என்ற தமிழக-கேரள எல்லைப் பகுதியில், 25-2-2024 அன்று நள்ளிரவு 1.00 மணி அளவில் திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி ஒன்று நிலை தடுமாறி 40 அடி உயரத்திலிருந்து கவிழ்ந்து கீழே செல்லும் செங்கோட்டை - கொல்லம் ரயில் மார்க்கத்திலுள்ள தண்டவாளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது. 

அப்போது அப்பகுதியில் வசித்து வந்த தம்பதியர் சண்முகையா – வடக்குத்தியாள் தம்பதியினர் செங்கோட்டையிலிருந்து புனலூர் நோக்கி வந்து கொண்டிருந்த பகவதியம்மன் கோவில் திருவிழா சிறப்புப் பயணிகள் ரயில் வரும் சத்தத்தைக் கேட்டு நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, தண்டவாளத்தில் சிறிது தூரம் ஓடிச் சென்று கையில் வைத்திருந்த டார்ச் லைட் ஒளியின் மூலம் ரயில் ஓட்டுநரிடம் சைகை காண்பித்து, ரயிலை நிறுத்தி ஏற்படவிருந்த பெரும் ரயில் விபத்தை தடுத்துள்ளனர்.  

உடனடியாகத் தகவலறிந்து காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து பொதுமக்களுடன் இணைந்து தண்டவாளத்தில் விழுந்து கிடந்த லாரியினை அப்புறப்படுத்தியுள்ளனர்.  மேலும் சென்னையிலிருந்து கொல்லம் நோக்கிச் சென்ற விரைவு ரயிலும் செங்கோட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

தங்களது முதிர்ந்த வயதையும், இருள் சூழ்ந்திருந்த நள்ளிரவு நேரத்தையும் பொருட்படுத்தாமல், பெரும் விபத்து நிகழ்வதைத் தடுத்து நிறுத்தும் ஒரே நோக்கத்துடன் தண்டவாளத்தில் ஓடிச்சென்று ரயிலை நிறுத்திய  சண்முகையா – வடக்குத்தியாள் தம்பதியினரின் வீரதீர செயலை பாராட்டிய முதல்வர் மு.க. ஸ்டாலின், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் வெகுமதி வழங்க உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து