முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற தேர்தல்: தமிழகம் - புதுச்சேரியில் வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்றே கடைசி நாள் : இறுதி வேட்பாளர் பட்டியல் மாலை வெளியாகிறது

வெள்ளிக்கிழமை, 29 மார்ச் 2024      தமிழகம்
Election 2024-03-29

Source: provided

சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் இறுதி  பட்டியல் இன்று வெளியாகிறது.

பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பாரதிய ஜனதா கூட்டணி மோதும் அரசியல் களத்தில் நாம் தமிழர் கட்சி தனியாக களம் இறங்கி உள்ளது.

வேட்புமனு தாக்கல் கடந்த 3 நாட்களுக்கு முன் முடிந்த நிலையில் மொத்தம் 1403 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். ஒரு வேட்பாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்களை தாக்கல் செய்திருப்பதால் மொத்த வேட்புமனு எண்ணிக்கை 1749 ஆக உள்ளது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். வேட்புமனுக்களில் அதிகபட்சமாக கரூரில் 62 பேர்,  வடசென்னையில் 54 பேர்,  கோவையில் 53 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.  குறைந்தபட்சமாக நாகையில் 13 பேர்,  சிதம்பரத்தில் 22 பேர் மனுதாக்கல் செய்து உள்ளனர்.

40 தொகுதிகளிலும் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று முன்தினம் நடைபெற்றது. அந்தந்த தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பொதுப்பார்வையாளர்கள் முன்னிலையில் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. மாலை 3 மணி வரை மனுக்கள் பரிசீலனை நடைபெற்ற நிலையில் ஒவ்வொரு வேட்பாளர்களும் தங்களது வழக்கறிஞருடன் வந்து வேட்புமனு பரிசீலனையில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், சர்ச்சைக்கு உள்ளான சேலம் திமுக வேட்பாளர் டி.எம் செல்வகணபதியின் வேட்புமனு ஏற்கப்பட்டது.  ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். உள்பட 6 ஓபிஎஸ்களின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன.சிதம்பரத்தில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவனின் வேட்புமனு ஏற்கப்பட்டது.

இதே போன்று தூத்துக்குடியில் போடியிடும் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழியின் வேட்புமனுவும் ஏற்கப்பட்டது.  இதே போன்று கோவையில் களம் இறகும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் வேட்புமனு ஏற்கப்பட்டது. மேலும் நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் களம் இறங்கும் 40 வேட்பாளர்களின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டன.  இவை மட்டுமல்லாது அனைத்து கட்சியினர் தரப்பினர் சார்பில் களம் காணும் முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

39 தொகுதிகளில் மொத்தம் 1749 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 1085 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 664 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட 22 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 14 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

வேட்பு மனுக்களை திரும்பப் பெற இன்று (சனிக்கிழமை) கடைசி நாள் ஆகும். அரசியல் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில்,  மாற்று வேட்பாளர்கள் இன்று வாபஸ் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பு மனுக்களை திரும்பப் பெறும் நடவடிக்கை நிறைவடைந்த பிறகு இன்று மாலை தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். அதன் பிறகு மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து