முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூருவை வீழத்தி ஐதராபாத் ஹாட்ரிக் வெற்றி

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2024      விளையாட்டு
Bhuvneshwar-Kumar 2024-04-1

Source: provided

ஐதராபாத் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றதுடன், 287 ரன்கள் விளாசி மீண்டும் புதிய சாதனையை படைத்துள்ளது. இந்த போட்டியில் பெங்களூருவை வீழ்த்தி ஐதராபாத் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது.

30-வது லீக் ஆட்டம்... 

17வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 22-ம் தேதி சென்னையில் தொடங்கி மே 26-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதில், சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி, பஞ்சாப், குஜராத், லக்னோ, ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. அந்த வகையில் 30-வது லீக் ஆட்டம் (ஏப். 15)  பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும்,  சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் களமிறங்கினர்.

39 பந்துகளில் சதம்... 

அபிஷேக் சர்மா 34 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஹெண்ட்ரிச் கிளாசனுடன் ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட் பெங்களூரு சிறப்பாக ஆடினார். அவர் 39 பந்துகளில் சதம் அடித்தார். ஹெண்ட்ரிச் கிளாசன் 67 ரன்கள் குவித்த நிலையில் கேட்ச் மூலம் அவுட் ஆனார். இவர்களை அடுத்து மார்க்ரம், அப்துல் சமத் களமிறங்கினர். 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 287 ரன்கள் குவித்தது.

288 ரன்கள் இலக்கு...

இதையடுத்து, 288 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களமிறங்கியது. அதிரடியாக விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 262 ரன்கள் எடுத்தது. அனுஜ் ரவாத் 25 ரன்களுடனும், வைசாக் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 35 பந்துகளுடன் 83 ரன்களை விளாசினார். ஃபாஃப் டு பிளெசிஸ் 28 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். மேலும், விராட் கோலி 20 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.

கம்மின்ஸ் பேட்டி....

வெற்றி பெற்ற பின் ஐதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்த போட்டியை பொறுத்தவரை நான் ஒரு பேட்ஸ்மேனாக இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். அந்த அளவிற்கு பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் இருந்தது. உண்மையிலேயே இந்த போட்டி பார்ப்பதற்கு அருமையாக இருந்தது. இது போன்ற போட்டிகளில் சிறப்பான செயல்பாடுகள் வெளிவரும். உண்மையிலேயே இந்த மைதானத்தின் தன்மையை அறிய வேண்டுமெனில் ஒரு பவுலர் 7 முதல் 8 ஓவர் வரை வீசினால் மட்டுமே மைதானத்தின் தன்மையை கணித்து போட்டியில் நமது திறனை வெளிப்படுத்த முடியும். இந்த மைதானம் மிகவும் டிரையாக உள்ளது. ஒரு அணியாக நாங்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்றதில் மகிழ்ச்சி. எங்களது அணியின் பேட்ஸ்மேன்கள் தற்போது மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

டு பிளெஸ்சிஸ் பேட்டி...

பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது, உண்மையிலேயே இந்த போட்டியில் எங்களது பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். டி20 கிரிக்கெட்டுக்கு ஏற்ற மைதானமாக இந்த மைதானம் இருந்தது. கடைசி வரை இலக்கிற்கு நெருக்கமாக செல்ல வேண்டும் என்று நினைத்தே விளையாடினோம். ஆனால் 280 ரன்கள் என்பது மிகப்பெரிய இலக்கு. அது எட்டுவதற்கு கடினமான ஒன்று. இருந்தாலும் நாங்கள் நிறைய விசயங்களை இந்த போட்டியில் முயற்சி செய்தோம். அந்த முயற்சிகள் பலன் அளித்துள்ளன. இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துவீசுவதில் மிக சிரமத்தை சந்தித்தனர். ஏனெனில் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தும்போது பந்துவீச்சாளர்களின் சமநிலை தவறியது. எங்களது பந்துவீச்சாளர்கள் அந்த இடத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் இந்த போட்டியில் 30 முதல் 40 ரன்கள் வரை நாங்கள் அதிகமாக வழங்கி விட்டோம். அதுவே தோல்விக்கு காரணமாகவும் அமைந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

ஐ.பி.எல்.லில் புதிய சாதனை

முன்னதாக நடப்பு மார்ச் 27-ம் தேதி நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் இழப்புக்கு 277 ரன்களை குவித்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோர் சாதனையை படைத்திருந்தது. தற்போது தனது ரெக்கார்டை தானே முறியடித்து நேற்றைய ஆட்டத்தில் 287 ரன்கள் எடுத்து ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் எடுத்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து