முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தொடரும் போராட்டம்: பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 14 மே 2024      உலகம்
Pak 2024-05-14

Source: provided

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தொடரும் போராட்டத்தின் விளைவாக பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். 

பாகிஸ்தானில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. கோதுமை மாவு விலை உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து ஜம்மு காஷ்மீர் கூட்டு அவாமி நடவடிக்கை குழு தலைமையில் நடைபெறும் இப்போராட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர். 

போராட்டம் தீவிரமடைந்ததால் பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவ படையினர் வரவழைக்கப்பட்டனர். போராடியவர்களை கலைக்கும் முயற்சியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டனர். இதனால் பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் உருவானது. 

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மோதலின்போது போலீஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். நேற்று முன்தினம் முசாபராபாத்தில் பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் முசாபராபாத்தை அடைந்த போது, ஷோரன் டா நக்கா கிராமத்திற்கு அருகே போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கினர். 

இதையடுத்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். இதில் 3 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர். இதற்கிடையே, போராட்டக்காரர்களுக்கும், அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டதால், அப்பகுதிக்கு உடனடியாக ரூ. 23 பில்லியன் மானியத்தை விடுவிக்க பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தார். 

எனினும், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைதி திரும்பவில்லை. போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நிகழ்ந்த வன்முறை மோதல்கள் குறித்து கவலை தெரிவித்த பிரதமர் ஷெரீப், சட்டத்தை யாரும் தங்கள் கையில் எடுக்கக்கூடாது என அறிவுறுத்தி உள்ளார். அனைத்து தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என்றும், விரைவில் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து