முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.எஸ்.கே.வில் இருந்து விலகியது குறித்து பிராவோ திடீர் விளக்கம்

வெள்ளிக்கிழமை, 27 செப்டம்பர் 2024      விளையாட்டு
Bravo 2024-03-27

Source: provided

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான டுவெய்ன் பிராவோ ஐபிஎல் தொடரில் 2008 -ம் ஆண்டு அறிமுகமானார். 2022-ம் ஆண்டு வரை 171 போட்டியில் விளையாடி 1500-க்கும் மேற்பட்ட ரன்களையும், 200-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். கடந்த 2022-ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியபோது ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பிராவோ தொடர்ந்து சென்னை அணியுடனே பயணிக்க இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.அந்த வகையில் சென்னை அணியின் நிர்வாகமும் அவரை பந்துவீச்சு பயிற்சியாளராக நியமித்தது. அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவர் சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்து வந்தார். இந்நிலையில் அண்மையில் கரீபியன் லீக் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடியிருந்த அவர் தற்போது அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

இந்த ஓய்வு அறிவிப்பு வெளியான கையோடு ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய ஆலோசகராகவும் பிராவோ அறிவிக்கப்பட்டுள்ளார். இப்படி ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் இருந்து விலகி கொல்கத்தா அணிக்காக பிராவோ மாறியது அனைவரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியுள்ளது. இந்நிலையில் பிராவோ இதுகுறித்து கூறிய கருத்தில் குறிப்பிட்டதாவது, "நான் டிரின்பாகோ நைட்ரைடர்ஸ் அணிக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் விளையாடி இருக்கிறேன். நான் நைட் ரைடர்ஸ் அணிக்காகவும் அந்த அணியை எதிர்த்தும் பல்வேறு தொடர்களில் விளையாடி உள்ளேன். நைட் ரைடர்ஸ் அணியின் நிர்வாகம் என்னை சிறப்பாக கையாண்டார்கள். எனவே இம்முறை நான் அந்த அணியின் நிர்வாகத்திற்காக புதிய பரிமாணத்தை எடுக்க வேண்டும் என்பதற்காகவே தற்போது அந்த அணியின் ஆலோசகராக செயல்பட இருக்கிறேன். எதிர்வரும் இளம் தலைமுறைக்கு என்னுடைய அனுபவத்தை பகிர தயாராக இருக்கிறேன்" என்று கூறினார்.

_______________________________________________________________________________

சிறந்த கேப்டன் கும்ப்ளே:யுவராஜ் சிங் புகழாரம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங். 2011ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த யுவராஜ் சிங் தொடர் நாயகன் விருதை தட்டிச்சென்றார். இவர் 132 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடி 2 ஆயிரத்து 750 ரன்களும் குவித்துள்ளார். 2019ம் ஆண்டு யுவராஜ் சிங் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார். இந்நிலையில் அனில் கும்ப்ளே தாம் பார்த்த சிறந்த இந்திய கேப்டன் என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். குறிப்பாக அணி தடுமாற்றமாக செயல்படும்போது ரிக்கி பாண்டிங்கை போல கும்ப்ளே கேப்டனாக தைரியமாக முன்னின்று வழி நடத்துவார் என்றும் யுவராஜ் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "நாங்கள் ஆஸ்திரேலியாவுக்கு சென்றபோது அனில் கும்ப்ளே கேப்டனாக நியமிக்கப்பட்டார். அனில் கும்ப்ளே சூழ்நிலை மிகவும் கடினமாக இருக்கும்போது பந்தை மற்றவர்களுக்கு கொடுக்காமல் தாமே தைரியமாக எடுக்கும் அணுகுமுறையை கொண்டவர். அதேபோல விக்கெட்டுகள் விழவில்லை என்றாலும் நான் பந்து வீசுகிறேன் என்று அவர் சொல்வார். அது போன்ற அணுகுமுறையை கொண்டவர்தான் சிறந்த லீடர் என்று நான் நினைத்தேன். அதனாலேயே ரிக்கி பாண்டிங் போன்ற கேப்டனின் அணுகுமுறையை பற்றி இங்கே நான் பேசுகிறேன். சூழ்நிலை கடினமாக இருக்கும்போது அல்லது சூழ்நிலை எதுவாக இருந்தாலும் பாண்டிங் அணிக்காக பேட்டிங் செய்வதற்கு தயாராக இருப்பார்" என்று கூறினார்.

_______________________________________________________________________________

பதக்கம் வென்ற அர்ஜூன், ஹரிகாவுக்கு ரூ.25 லட்சம் பரிசு

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வென்ற அர்ஜூன், ஹரிகாவுக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ரூ.25 லட்சம் பரிசு வழங்கினார்.  ஹங்கேரியின் புடாபெஸ்ட்டில் நடைபெற்ற 45-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சாம்பியன்களான இந்திய ஆடவா் மற்றும் மகளிர் அணிகளில் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அா்ஜுன் எரிகைசி, டி.ஹரிகா ஆகியோருக்கு அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி ரொக்கமாக ரூ.25 லட்சம் வழங்கி கௌரவித்துள்ளார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 97 ஆண்டுகால வரலாற்றில் இந்தியா தங்கம் வென்றது இதுவே முதல் முறையாகும். அதிலும், ஒரே போட்டியில் ஆடவா் மற்றும் மகளிா் என இரு பிரிவுகளிலுமே இந்தியா தங்கம் வென்று அசத்தியுள்ளது.  இந்தப் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் மாநில விவசாய அமைச்சர் தும்மல நாகேஸ்வர ராவ் மற்றும் பிற உயரதிகாரிகள் முன்னிலையில் செஸ் வீரர்களை முதல்வர் பரிசு வழங்கி கௌரவித்தார். இந்நிலையில், நாடு திரும்பிய சாம்பியனான அணியினருக்கு தில்லியில் புதன்கிழமை பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்ற போது அகில இந்திய செஸ் சம்மேளனம் ரூ.3.2 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

_______________________________________________________________________________

வங்கதேச ரசிகர் மீது தாக்குதல்

இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரின் கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியைக்காண வங்கதேசத்தில் இருந்து ‘சூப்பர் ஃபேன்’ டைகர் ராபி என்பவர் புலி வேடமணிந்து வந்துள்ளார். இந்திய அணி ரசிகர்கள் அவரிடம் இருந்து வங்கதேச கொடியைப் பிடுங்கி எறிந்து விட்டு அவர் சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த ராபியை காவல்துறையினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து உத்தரப் பிரதேச கிரிக்கெட் சங்க நிர்வாகி கூறுகையில், “டைகர் ராபி புலி வேடம் அணிந்து வந்து சி ஸ்டாண்டில் அமர்ந்திருந்ததாகவும், அவரிடம் இந்திய அணிகள் தகராறில் ஈடுபட்டதாகவும் கூறினார். ஆனால், அவரை அடித்ததற்கான எந்த விவரமும் தெரியவில்லை” என்றார். இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், “டைகர் ராபி சி ஸ்டாண்டின் பால்கனியில் புலி வேடம் அணிந்து இந்திய அணி பற்றி கோஷமிட்டதால் ரசிகர்கள் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அவர்கள் அவரது வயிற்றிலும் குத்தி காயப்படுத்தியுள்ளனர். வலியால் துடித்த அவரை பால்கனியில் இருந்த காவலர் மீட்டு ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்துள்ளார். இருப்பினும், அவருக்கு மைதானத்தில் இருந்தவர்கள் மூலம் முதலுதவி கொடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து