முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.வை வீழ்த்த நினைப்பவர்களின் கணக்கு தப்புக்கணக்காகவே முடியும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை

செவ்வாய்க்கிழமை, 6 மே 2025      தமிழகம்
Stalin 2022 12 29

சென்னை, சந்தர்பவாதிகளிடம் மறைமுக கூட்டணி வைத்து தி.மு.க.வை வீழ்த்த நினைப்பவர்களின் கணக்கு தப்புக்கணக்காகவே முடியும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நான்காண்டுகள்...

தமிழ்நாடு முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நம் உயிருடன் கலந்திருக்கும் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல். 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' எனப் பதவியேற்பு உறுதிமொழி ஏற்று, இந்த மே மாதம் 7-ம் நாளுடன் (இன்று) நான்காண்டுகள் நிறைவடைந்து, ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது உங்களில் ஒருவனான என் தலைமையிலான நமது திராவிட மாடல் அரசு. நம்பிக்கை வைத்து ஆட்சியை ஒப்படைத்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்குமான திட்டங்களை வழங்கிடும் நல்லாட்சியை வழங்கி வருகிறோம்.

தவறிவிட்டோமே....

2021-ம் ஆண்டு தேர்தல் வெற்றிச்சான்றிதழை நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தன் அண்ணன் அருகே நிரந்தர ஓய்வெடுக்கும் இடத்தில் காணிக்கையாக்கிவிட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "வாக்களித்த மக்களுக்கு மட்டுமின்றி, வாக்களிக்காத மக்களும் இவர்களுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று நினைக்கக்கூடிய அளவிலான ஆட்சியை வழங்கிடுவோம். என்று அளித்த உறுதிமொழியைக் காப்பாற்றும் வகையில் திராவிட மாடல் அரசு, 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற இலட்சியத்துடனான அனைவருக்குமான அரசாகத் திகழ்கிறது.

முன்னோடியான அரசு...

இந்தியாவின் பிற மாநிலங்களும் - கொள்கைரீதியாக நமக்கு என்றும் எதிரானவர்கள் ஆள்கின்ற மாநிலங்களும்கூட திராவிட மாடல் அரசின் திட்டங்களைப் பின்பற்றும் வகையில் முன்னோடியான அரசாக - முதன்மையான அரசாகத் தமிழ்நாட்டை இந்த நான்காண்டுகளில் உயர்த்தியிருக்கிறோம். நலன் தரும் திட்டங்கள் -நாடு போற்றும் சாதனைகளுடன் ஐந்தாவது ஆண்டில் திராவிட மாடல் அரசு பெருமிதத்துடன் அடியெடுத்து வைக்கிறது. அடுத்த ஐந்தாண்டுகளும் இந்த நல்லாட்சி தொடரும் என்பதைத் தமிழ்நாட்டு மக்களின் மனநிலை காட்டுகிறது.

கடுமையாக உழைத்திட... 

ஏழாவது முறையாக 2026 சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியமைக்கப் போவதும் திராவிட முன்னேற்றக் கழகம்தான். மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை உறுதி செய்திடக் களத்தில் கடுமையாக உழைத்திட வேண்டும். அரசியல் எதிரிகளால் நமது ஆட்சியைக் குறை சொல்ல முடியாத காரணத்தால் அவதூறு சேற்றை வீசுகிறார்கள். ஈரைப் பேனாக்கி, பேனைப் பேயாகக் காட்ட நினைக்கிறார்கள். அதிகார அமைப்புகளை ஏவி அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். இந்தப் பூச்சாண்டிகளுக்கு மிரள்வதற்கு அடிமைக் கட்சியல்ல, நம் தி.மு.க. இது சுயமரியாதை இயக்கம். தன்மானமும் தைரியமும் கொண்ட இயக்கம். தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கும் இயக்கம். இந்தியாவுக்கு வழிகாட்டும் இயக்கம்.

நான் மறக்கவில்லை...

2021 சட்டமன்றத் தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழகம் அளித்த 505 வாக்குறுதிகளில் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படாத சாதனைத் திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு, மக்களுக்குப் பயனளித்து வருகின்றன. இன்னும் நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகளும் இருப்பதை நான் மறக்கவுமில்லை, மறுக்கவுமில்லை. அவற்றையும் நிறைவேற்றிட வேண்டும் என்பதில் உறுதியாகவே இருக்கிறேன். அதற்கு உடன்பிறப்புகளான நீங்கள் அனைவரும், உங்களில் ஒருவனான எனக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும்.

கழகத்தின் பவள விழா...

இனி ஓராண்டு காலம் நமக்குத் தேர்தல் பணிகளே முதன்மையானதாக இருக்கும். அதற்கான செயல்திட்டங்கள் என் தலைமையில் தலைமைக் கழகத்தால் வகுக்கப்பட்டு, மாவட்டக் கழகச் செயலாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நம் செயல்பாடுகள் அமைந்திட வேண்டும். கழகத்தின் பவள விழாப் பொதுக்குழு ஜூன் 1-ஆம் நாள் கூடல் மாநகராம் மதுரையில் நடைபெறவிருப்பதைக் கழகப் பொதுச்செயலாளர் அவர்கள் அறிவித்திருக்கிறார். அதில், தேர்தல் பணிகள் குறித்து இன்னும் விரிவான செயல்திட்டங்கள் முன்வைக்கப்படும்.

இளைஞரணி சார்பில்.... 

ஒரு மணி நேரப் பேச்சைவிட, ஒரு நிமிட - அரை நிமிடக் காணொலிகள், ரீல்ஸ்கள்தான் இலட்சக்கணக்கானவர்களிடம் உடனடியாகப் போய்ச் சேர்கின்றன. முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டையொட்டி தலைமைக் கழகத்தால் வழங்கப்பட்ட பொறுப்பினை ஏற்று, கழக இளைஞரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதிலிருந்து தேர்வு பெற்றுள்ள இளம்பேச்சாளர்கள் பலருடைய உரைகளை ஒரு நிமிடக் காணொலியாகப் பார்க்கிறேன்.

அனைத்து வாக்காளர்களிடம்... 

அவர்களின் ஆர்வத்தை, உத்வேகத்தை, கொள்கையுணர்வைக் கண்டு மகிழ்கிறேன். கழக நிர்வாகிகளும், பாக முகவர்களும், பூத் கமிட்டி உறுப்பினர்களும் இத்தகைய உரைகளைக் கேட்டு அவற்றைப் பகிர்வதுடன், அவரவர் பகுதிகளில் நிறைவேற்றப்பட்டுள்ள திராவிட மாடல் அரசின் திட்டங்களையும், அதனால் மக்கள் பெற்றுள்ள பயன்களையும் சமூக வலைத்தளங்கள் - வாட்ஸ்அப் குழுக்கள் வாயிலாக வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

மனக்கணக்கு தப்பாகவே... 

சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துத் தமிழ்நாட்டுக்கு துரோகமிழைப்பவர்களும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளும் தி.மு.க.வை வீழ்த்திவிட முடியாதா எனத் தொடர் தோல்வியின் ஆற்றாமையில் தவிக்கிறார்கள். அவர்களின் மனக்கணக்கு தப்புக்கணக்காகவே முடியும் என்பதைச் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் போடுகிற கணக்கு தீர்மானிக்கும். நாம் மக்களிடம் செல்வோம். அவர்களுக்காகக் கழக அரசு செய்ததைச் சொல்வோம். தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் அவற்றை எடுத்துரைப்போம். கழக சொற்பொழிவாளர்களின் கருத்துகளை உள்வாங்கி, கழக அரசின் சாதனைகளை ஒவ்வொரு வீடாகச் சென்று முழங்கிடுவோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து