விடா முயற்சியும் பயிற்சியாளரின் ஊக்கமுமே வெற்றிக்கு வழி

செவ்வாய்க்கிழமை, 28 ஆகஸ்ட் 2012      விளையாட்டு
Image Unavailable

சென்னை, ஆக.- 28 - விடா முயற்சியும், பயிற்சியாளரின் ஊக்கமுமே வெற்றிக்கு வழி என்று ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுசில்குமார் கூறினார்.  ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற சுசில்குமார், வெங்கலப் பதக்கம் பெற்ற யோகேஸ்வர் தத் ஆகியோருக்கு நேற்று சென்னையில் உள்ள முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் பாராட்டு விழா நடத்தி கவுரவிக்கப்பட்டனர்.  ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுசில்குமாருக்கு 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும், வெங்கலப் பதக்கம் வென்ற யோகேஸ்வரர் தத்துக்கு 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும், பயிற்சியாளர் ஸ்ரீயெஷ்வீர் சிங்குக்கு 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் வேலம்மாள் பள்ளியின் சார்பில் வழங்கப்பட்டது.  பாராட்டு விழாவில் கலந்து கொண்டு மல்யுத்த வீரர் சுசில்குமார் பேசியதாவது:- நான் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக எனக்கு ஹரியானா மாநில அரசு சன்மானம் வழங்கியது. அந்த சன்மானம் அளவுக்கு இந்தப் பாராட்டு விழாவை பெருமையுடன் பார்க்கிறேன். லண்டனில் ஒலிம்பிக்கில் தவறவிட்ட தங்கத்தை அடுத்த முறை ஒலிம்பிக்கில் கண்டிப்பாக வெல்வேன். அரசு பிஜி ஒலிம்பிக்கை விட லண்டன் ஒலிம்பிக்கிற்கு நல்ல ஒத்துழைப்பை அளித்தது. நன்றாக பயிற்சி எடுத்து அடுத்த முறை தங்கத்தை கைப்பற்றுவேன்.    ஹரியானா மாநிலம் எனக்கு இலவசமாக நிலம் கொடுத்து உள்ளது. அந்த நிலத்தில் ஏழை மாணவர்களுக்கு விளையாட்டுப் பயிற்சி கொடுப்பேன். பெற்றோர்கள் தான் தங்கள் குழந்தைகளுக்கு எதில் அதிக ஆர்வம் இருக்கிறதோ அதில் அவர்களை விட வேண்டும். மாணவர்களும் பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் மதித்து நடந்தால் நிச்சயம் வெற்றி அடைவார்கள். மேலும் கிரிக்கெட்டை போலவே மற்ற விளையாட்டுகளுக்கு தற்போது நல்ல வரவேற்பு உள்ளது. இவ்வாறு சுசில்குமார் பேசினார்.  வெங்கலப்பதக்கம் வென்ற ஸ்ரீயோகேஸ்வர் தத் பேசுகையில், கடந்த 21 ஆண்டுகளாக நான் கடுமையாக உழைத்ததன் விளைவாகத்தான் வெங்கலப் பதக்கம் வென்றுள்ளேன். சுசில்குமாரை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு வரக்கூடிய போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்வேன் என்றார்.  முன்னதாக அரசுப் பொதுத்தேர்வில் சாதனை புரிந்த மாணவர்களை பாராட்டி கவுரவித்தனர். நிகழ்ச்சியில் வேலம்மாள் கல்விக் குழுமத்தின் தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன் மற்றும் வேலம்மாள் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.    

இதை ஷேர் செய்திடுங்கள்: