முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனவர்கள் பலியான சம்பவம் - பொன். ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 17 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

ராமேஸ்வரம்,ஏப்.18 - மத்திய, மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்காததால் மீனவர்கள் தொடர்ந்து பலியாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது என்று பா.ஜ.க. மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 2 ம் தேதி மீன் பிடிக்க சென்று காணாமல் போன தங்கச்சிமடத்தை சேர்ந்த 3 மீனவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை மீனவர் மாரிமுத்துவின் உடல் கோட்டை பட்டினம் கடற்கரை அருகே கரை ஒதுங்கியது. பலியான மீனவர்களின் குடும்பங்களுக்கு பொன். ராதாகிருஷ்ணன் சென்று ஆறுதல் கூறி தலா ரூ. ஒரு லட்சம் வழங்கினார். 

மாநில பொதுச் செயலாளர் நாகராஜன், மாநில செயலாளர்கள் சுரேந்திரன், பழனிவேல்சாமி, தேசிய குழு உறுப்பினர் முரளிதரன், மாவட்ட பொதுச் செயலாளர் கார்மேகம், நகர தலைவர் கண்ணன், ராமநாதபுரம் வேட்பாளர் துரைக்கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது, 

இந்திய, இலங்கை நாடுகளுக்கு இடையே நடந்த கிரிக்கெட் நான்கு மீனவர்களின் உயிரை பறித்துள்ளது. இலங்கை கடற்படையினரின் அராஜகத்தை படுகொலை செய்து வருவதை தடுக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காமல் இந்த துயர சம்பவங்கள் தொடர்கிறது. கடந்த ஜனவரி 12 மற்றும் 22 ல் இலங்கை கடற்படையினரால் 2 மீனவர்கள் கொல்லப்பட்டனர். இதன் பின்னர் பல மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் சுஷ்மா சுவராஜ் டெல்லியில் போராட்டம் செய்ததை தொடர்ந்து மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். 

தற்போது இலங்கை கடற்படையினரால் நான்கு மீனவர்கள் கொலை செய்யப்பட்ட துயர சம்பவம் இந்திய அரசின் ஆளுமையை கேள்விக் குறியாக்கி உள்ளது. மத்திய அரசு துரித நடவடிக்கை எடுத்திருந்தால் இலங்கை அரசு இது போன்ற தவறுகளை தொடர்ந்து செய்யாது. பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்குவதுடன் அவர்களது குடும்பத்துக்கு வேலைவாய்ப்பளிக்க வேண்டும். இல்லாவிட்டால் இலங்கை அரசுடன் சேர்ந்தே மத்திய அரசும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக மக்கள் சந்தேகப்படுவார்கள். இந்த நிலை தொடர்ந்தால் தமிழக மீனவர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி தமிழக கடலோர பகுதிகளில் பா.ஜ.க. சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்