முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்படும்: அமைச்சர்

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.16 - பராமரிப்பின்றி விடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறை முகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறை முகங்கள் துறை மானியக் கோரிக்கையில் விவாதத்திற்குப்பிறகு அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் அறிவிப்பு விவரம் வருமாறு:-

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் திருச்சி, திருநெல்வேலி, புதுக்கோட்டை, சிவகங்கை, திருவண்ணாமலை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 11 நகரங்களில் புறவழிச்சாலைகள் அமைக்கப்பட்டதால் பராமரிப்பின்றி விடப்பட்ட 81.27 கி.மீ. நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளை 82.33 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்படும்.

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில், உத்திரமேரூர் நகருக்கு 4.20 கி.மீ. நீள புறவழிச்சாலையும் மற்றும் வாலாஜாபாத் நகருக்கு 3.40 கி.மீ. நீள புறவழிச்சாலையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக நில எடுப்புப் பணிகளை 14.50 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும்.

ஈரோடு மாநகருக்கு மூன்றாம் கட்டமாக வெளிவட்டச் சுற்றுச்சாலை அமைக்கும் பணியை கொக்கராயன்பேட்டை - திண்டல் சாலையில் கி.மீ. 7/6 முதல் கி.மீ 14/8 வரை ஒரு இரயில்வே மேம்பாலம் உட்பட 65.60 கோடி ரூபாய் மதிப்பில் இவ்வாண்டில் மேற்கொள்ளப்படும்.

எடப்பாடி நகருக்கு புறவழிச்சாலை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி முதற்கட்டமாக எடுத்துக் கொள்ளப்பட்டு பணி முடிவுறும் தருவாயில் உள்ளதால், இவ்வாண்டு 8.80 கி.மீ. நீள புறவழிச்சாலையினை 50 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும்.

சாலைகளை தரம் உயர்த்துவது என்பது போக்குவரத்துச் செறிவு, சாலையின் முக்கியத்துவம் மற்றும் அகலத்தினை பொறுத்து அவசியாமாகிறது. இதன் அடிப்படையில் இவ்வாண்டில், 910 கி.மீ. நீள மாவட்ட முக்கியச் சாலைகள் மாநில நெடுஞ்சாலைகளாகவும் மற்றும் 870 கி.மீ. நீள மாவட்ட இதரச் சாலைகள் மாவட்ட முக்கியச் சாலைகளாகவும் மேம்படுத்தப்படவுள்ளன.

நெடுஞ்சாலைத்துறையின் அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கும் ஒருங்கிணைந்த குடியிருப்பு கட்டடம் 6 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை கிண்டியில் உள்ள தரஉறுதி மற்றும் ஆராய்ச்சி அலுவலக வளாகத்தில் இவ்வாண்டில் கட்டப்படும்.

2103-14 ஆம் ஆண்டு பகுதி-ஐஐ திட்டத்தின் கீழ், மதுரை மற்றும் எடப்பாடியில் கோட்ட அலுவலகக் கட்டங்களும், ஸ்ரீவைகுண்டம், ஆத்தூர், மயிலாடுதுறை, சிவகிரி, ஒரத்தநாடு ஆகிய 5 இடங்களில் பிரிவு அலுவலகத்துடன் இணைந்த உட்கோட்ட அலுவலகங்களும், தாராபுரத்தில் ஒரு உட்கோட்ட தரக்கட்டுப்பாடு அலுவலகமும், எடப்பாடியில் ஒரு உட்கோட்ட அலுவலகமும், குளித்தலையில் ஒரு தரக்கட்டுப்பாடு ஆய்வு கூடமும், மருங்காபுரியில் ஒரு பிரிவு அலுவலகமும் மற்றும் முசிறி, இலுப்பூர், மேட்டூர், திருவையாறு, நித்தம், இளையான்குடி, பரமக்குடி, ஆலங்குளம் ஆகிய 8 ஊர்களில் பயணியர் மாளிகைகளும் 5.75 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும்.

சாலை சுத்திகரிப்பு இயந்திரங்களைப் பயன்படுத்தி மாநகராட்சி பகுதியில் உள்ள நெடுஞ்சாலைகளை நல்ல முறையில் தூய்மையாக பராமரிப்பதற்காக திருச்சி, சேலம், மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களுக்கு தலா ஒன்றும், சென்னை மாநகருக்கு இரண்டும் ஆக மொத்தம் 6 சாலை சுத்திகரிப்பு இயந்திரங்கள் 4.50 கோடி ரூபாய் மதிப்பில் கொள்முதல் செய்யப்படும்.

அனைத்து பொறியாளர்களும் எல்லாவிதமான மேம்பட்ட தொழில்நுட்பங்களை பயிலுவதற்கு வசதியாக, நெடுஞ்சாலைத்துறையின் தரஉறுதி மற்றும் ஆராய்ச்சி அலுவலக வளாகத்தில், 14.16 கோடி ரூபாய் மதிப்பில் பயிற்சி மையம் கட்டப்படும்.

ஈரோடு மாநகரில், ஈரோடு - பெருந்துறை - காங்கேயம் சாலையில், அரசு மருத்துவமனை அருகில் 50 கோடி ரூபாய் மதிப்பில் புதிய சாலை மேம்பாலம் அமைக்கப்படும்.

வேலூர் மாவட்டம், ஆம்பூர் நகராட்சியில் ஆம்பூர் கிழக்குப் பகுதி கிராமங்கள் மற்றும் பெத்தலகேம் பகுதியை, தேசிய நெடுஞ்சாலை எண்.46 உடன் இணைக்கும் வகையில் ஆம்பூர் - வாணியம்பாடி இரயில் நிலையங்களுக்கு இடையே தமிழக அரசு நிதியிலேயே 29.90 கோடி ரூபாய் மதிப்பில் இரயில்வே மேம்பாலம் கட்டப்படும்.

இவ்வாறு அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony