பிரசாந்த் உள்பட 3 தரகர்கள் வீடுகள் `சீல்' வைப்பு

செவ்வாய்க்கிழமை, 21 மே 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.22 - சென்னை கிரிக்கெட் தரகர்கள் சங்க தலைவர் பிரசாந்த் நேற்று முன்தினம் மாலை சரண் அடைந்தார். அவருடன் நெருங்கிய தொடர்புடைய தரகர்களான சஞ்சய் பாவ்னா, கிட்டி என்ற உத்தம் சி ஜெயின் ஆகியோர் தலைமறைவாக இருக்கிறார்கள்.

இவர்கள் இருவரும் ஐகோர்ட்டில் முன் ஜாமீன் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த 3 பேரின் வீடுகளிலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று முன்தினமும்,  நேற்றும் சோதனை நடத்தி சீல் வைத்தனர்.

அயனாவரத்தில் உள்ள பிரசாந்த் வீட்டில் டி.எஸ்.பி. ராஜா சீனிவாசன் தலைமையில் நேற்று முன்தினம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ரூ. 20 லட்சம் ரொக்கப் பணம், 2 லேப்-டாப், செல்போன்கள் ஆகியவை சிக்கியது. ஒரு அறை திறக்க முடியாததால் நேற்று பகலில் பிரசாந்த்தை நேரில் அழைத்து வந்து திறந்து சோதனையிடப்பட்டது.

இதில் கிரிக்கெட் சூதாட்டத்துக்கான முக்கிய ஆதாரங்களாக அணிகளின் பெயர்கள் கொண்ட ரகசிய குறுயீடுகள், பண பட்டுவாடா ஆதாரங்கள் சிக்கின. மற்றொரு தரகர் கிட்டி என்ற உத்தம் சி ஜெயின் வீடு வேப்பேரி சம்பத் சாலையில் உள்ள பி.பி.சி. அபார்ட்மெண்ட்டில் 2 -வது மாடியில் உள்ளது. இங்கு டி.எஸ்.பி. பரணிகுமார் தலைமையில் சோதனை நடந்தது.

அப்போது ரூ. 3 லட்சத்து 30 ஆயிரம் ரொக்கம், ரூ. 5 லட்சம் வீதம் பணம் எழுதி நிரப்பப்பட்ட நிலையில் 10 செக்குகள், செம்மஞ்சேரியில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான பிளாட்டுக்கான தஸ்தாவேஜூகள், 10 சிம்கார்டு, 2 லேப்-டாப், 1 செல்போன், சிம்கார்டுகள் ஆகியவை சிக்கியது.

தரகர் சஞ்சய் ராவ்னா வீடு கெல்லிஸ் சந்திப்பில் பழைய உமா தியேட்டர் அருகில் பிரான்சன் தெருவில் உள்ளது. இந்த வீட்டை அவர் இந்த ஆண்டுதான் வாங்கியுள்ளார். கீழ்த் தளத்தை அவர் வாடகைக்கு விட்டுள்ளார். வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்ததால் கோர்ட்டு அனுமதியுடன் பூட்டை உடைத்து சோதனை நடத்தினார்கள்.

கிரிக்கெட் தரகர்கள் வீடுகளில் நடந்த சோதனை சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் நெருக்குதலுக்கு பயந்து தலைமறைவாக உள்ள தரகர்கள் பலர் போலீசில் சரண் அடைய திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: